Published : 30 Sep 2013 12:31 PM
Last Updated : 30 Sep 2013 12:31 PM

சூப்பர் ஓவரில் வென்றது ஒடாகோ!

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் லயன்ஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஓடாகோ.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஒடாகோ அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்க்க, ஆட்டம் டையில் முடிந்தது.

இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் பேட் செய்த ஒடாகோ விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய லயன்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுக்க மீண்டும் ஆட்டம் டையானது.

இதையடுத்து சூப்பர் ஓவரின் கடைசிப் பந்தில் எடுக்கப்பட்ட ரன்களின் அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சூப்பர் ஓவரின் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்திருந்த ஒடாகோ அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. லயன்ஸ் அணி, சூப்பர் ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முதலில் பேட் செய்த லயன்ஸ் அணியில் வான் டெர் டுசான் 17, பௌமா 13 ரன்களிலும், கேப்டன் பீட்டர்சன் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் டி காக், நாதன் மெக்கல்லம் வீசிய 15-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசி, 38 பந்துகளில் அரைசதம் கண்டார். தொடர்ந்து வேகம் காட்டிய டி காக், அடுத்த 22 பந்துகளில் சதமடித்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. டி காக் 63 பந்துகளில் 5 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 109 ரன்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய ஒடாகோ அணியில் நீல் புரூம் 6 ரன்களிலும், கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தபோதும், ரூதர்போர்டு 21 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்தார். இதேபோல் டி பூர்டரும் 32 ரன்கள் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் தனிநபராகப் போராடிய நீஷாம் 25 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் ஓடாகோ 167 ரன்கள் சேர்த்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x