Last Updated : 31 Dec, 2013 01:22 PM

 

Published : 31 Dec 2013 01:22 PM
Last Updated : 31 Dec 2013 01:22 PM

சென்னை ஓபன் டென்னிஸ்: ஜீவனை வெளியேற்றினார் வெஸல்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் தோல்வி கண்டார்.

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் முதல்முறையாக பங்கேற்ற ஜீவன் 5-7, 2-6 என்ற நேர் செட்களில் சர்வதேச தரவரிசையில் உள்ள 85-வது இடத்தில் உள்ள செக். குடியரசின் ஜிரி வெஸலிடம் தோல்வி கண்டார். ஏடிபி டென்னிஸ் போட்டியில் முதல் வெற்றியை ருசித்துள்ள வெஸல், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.

2014 ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. வைல்ட்கார்ட் மூலம் சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவில் விளையாடிய ஜீவன் முதல் செட்டின் 2-வது கேமி்லேயே வெஸலின் சர்வீஸை முறியடித்து ஆட்டத்தை சிறப்பாகத் தொடங்கினார்.

இதன்பிறகு சரிவிலிருந்து மீள்வதற்காக கடுமையாகப் போராடிய வெஸல், அதிகபட்சமாக மணிக்கு 217 கி.மீ. வேகத்தில் சர்வீஸை அடித்ததோடு, அவ்வப்போது ஏஸ் சர்வீஸ்களையும் அடித்தார். எனினும் 6-வது கேம் வரை வெஸலுக்கு ஈடுகொடுத்து விளையாடிய ஜீவன், 7-வது கேமில் தனது சர்வீஸை வெஸலிடம் இழந்தார்.

இதன்பிறகு ஆக்ரோஷமாக ஆடிய வெஸல், 11-வது கேமில் 2-வது முறையாக ஜீவனின் சர்வீஸை முறியடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். 12-வது கேமில் வெஸலின் சர்வீஸை முறியடிக்க ஜீவன் போராடினாலும், ஏஸ் சர்வீஸ் ஒன்றை அடித்து அந்த செட்டை முடிவுக்குக் கொண்டு வந்தார் வெஸல். 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த செட் 7-5 என்ற கணக்கில் வெஸல் வசமானது.

பின்னர் நடைபெற்ற 2-வது செட்டின் முதல் கேமிலேயே தனது சர்வீஸை வெஸலிடம் இழந்த ஜீவன், அடுத்த கேமில் வெஸலின் சர்வீஸை முறியடித்து பதிலடி கொடுத்தார். 4-வது கேமில் வெஸலின் சர்வீஸை தகர்க்க போராடிய ஜீவன், 5-வது கேமில் தனது சர்வீஸை இழக்க, ஆட்டம் மீண்டும் வெஸலின் வசமானது. இதன்பிறகு 7-வது கேமில் ஜீவனின் சர்வீஸை முறியடித்த வெஸல், அடுத்த கேமில் தனது சர்வீஸை தன்வசமாக்கி போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்தார். 2-வது செட் 6-2 என்ற கணக்கில் வெஸல் வசமானது.

1 மணி நேரம் 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நெடுஞ்செழியன் சிறப்பாக ஆடியபோதும் அவருடைய சர்வீஸ் மற்றும் ஷாட்களில் வேகம் இல்லாதது அவருக்கு பலவீனமாக அமைந்தது. அதேநேரத்தில் உயரமான வெஸலுக்கு அவருடைய சர்வீஸ் மிகப்பெரிய பலமாக அமைந்தது.

காலிறுதியில் மைனேனி ஜோடி

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாகேத் மைனேனி-ரஷியாவின் கரீன் கச்சனோவ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஜோடி தங்களின் முதல் சுற்றில் 6-1, 7-6 (9-7) என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ஆல்பர்ட் ரேமோஸ்-பேப்லோ கரீனோ புஸ்டா ஜோடியைத் தோற்கடித்தது.

பிரதான கோர்ட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டின் 2-வது கேமிலேயே ரேமோஸ் ஜோடியின் சர்வீஸை முறியடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது மைனேனி-கரீன் ஜோடி.

தொடர்ந்து 3-வது கேமில் தங்களின் சர்வீஸை தன்வசப்படுத்திய மைனேனி ஜோடி, 4-வது கேமில் மீண்டும் எதிர்ஜோடியின் சர்வீஸை முறியடித்தது. இதனால் முதல் 5 கேம்களின் முடிவில் 5-0 என்ற நிலையை எட்டியது மைனேனி ஜோடி. இதனால் முதல் 6 கேம்களிலேயே முதல் செட் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தங்களின் 3-வது சர்வீஸை தக்கவைத்தது ரேமோஸ் ஜோடி.

7-வது கேமில் சர்வீஸ் அடித்த மைனேனி அதிரடியாக இரு ஏஸ் சர்வீஸ்களை விளாசி முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் முடிவுக்கு கொண்டு வந்தார். 21 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த செட்டில் மைனேனி 4 ஏஸ் சர்வீஸ்களை அடித்தார்.

பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் சுதாரிப்போடு விளையாடிய ரேமோஸ் ஜோடி, 4-வது கேமில் கச்சனோவின் சர்வீஸை முறியடித்தது. கச்சனோவ் டபுள்பால்ட் அடித்தது எதிர்ஜோடிக்கு சாதகமானது. எனினும் அடுத்த கேமில் ரேமோஸ் ஜோடியின் சர்வீஸை முறியடித்து பதிலடி கொடுத்தது மைனேனி ஜோடி. இதன்பிறகு அபாரமாக ஆடிய இரு ஜோடிகளும் தங்களின் சர்வீஸை தக்கவைத்துக் கொண்டதால் இந்த செட் 6-6 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இதையடுத்து இந்த செட்டை முடிவுக்குக் கொண்டுவர டைபிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது.

டைபிரேக்கரில் ஒரு கட்டத்தில் 1-5 என்ற கணக்கில் பின்னடைவில் இருந்தது மைனேனி ஜோடி. 7-வது சர்வீஸில் எதிர் ஜோடியின் சர்வீஸை முறியடித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார் மைனேனி. இதன்பிறகு 12-வது சர்வீஸில் சமநிலையை எட்டிய மைனேனி ஜோடி, 9-7 என்ற கணக்கில் டைபிரேக்கர் செட்டை கைப்பற்றி போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1 மணி நேரம், 11 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாஹேத் மைனேனியின் அதிரடி சர்வீஸ்களும், அபாரமான ஷாட்களும் அந்த ஜோடிக்கு பலம் சேர்த்தது.

சோம்தேவை சந்திக்கிறார் ராம்குமார்

தகுதிச்சுற்றில் விளையாடிய இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் தனது மூன்றாவது தகுதிச்சுற்றில் 7-6 (3), 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்லோவேகியாவின் நார்பெர்ட் கோம்பஸை வீழ்த்தி பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றார். ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் 4-வது இந்தியரான ராம்குமார் தனது முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரரான சோம்தேவை சந்திக்கிறார். இந்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x