Last Updated : 03 Aug, 2016 09:06 AM

 

Published : 03 Aug 2016 09:06 AM
Last Updated : 03 Aug 2016 09:06 AM

இந்திய ஜோடிகள் டென்னிஸில் ஜொலிக்குமா?

1996-ல் நடைபெற்ற அட் லாண்டா ஒலிம்பிக் கில் ஒற்றையர் பிரிவில் லியாண்டர் பயஸ் வெண்கலம் வென்றார். அதைத் தவிர ஒலிம்பிக்கில் வேறு எதையும் இந்தியா சாதிக்க முடியவில்லை.

இம்முறை ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சார்பில் 4 பேர் களமிறங்குகின்றனர். ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் இந்தியாவிலிருந்து யாரும் தகுதி பெறவில்லை.

ஆடவர் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் - ரோகன் போபண்ணா ஜோடியும், மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - பிரார்த்தனா தாம்ப்ரே ஜோடியும், கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா - சானியா மிர்சா ஜோடியும் களமிறங்குகின்றன.

இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு ஆகியவற்றில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பிருப் பதாக கருதப்படுகிறது. இதில் ஆடவர் இரட்டையரில் நாட்டுக்காக விளையாடு கிறோம் என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பயஸும், போபண்ணாவும் ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே பதக்க வேட்டை சாத்தியப்படும்.

2012-ல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் பதக்கம் வெல்வதற்கு இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் பயஸின் வாய்த் துடுக்கு, பூபதி, போபண்ணா ஆகியோர் பயஸை புறக்கணித்தது, கலப்பு இரட்டையர் பிரிவில் பூபதி-சானியா ஜோடி கலக்கி வந்த நிலையில், அதைப் பிரித்து பயஸோடு சானியாவை விளையாட வைத்தது போன்ற காரணங்களால் பதக்கமின்றி வெறுங்கையோடு திரும்பியது இந்திய அணி.

இந்த முறையும் அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் வற்புறுத்தலின் பேரிலேயே பயஸை தனது இணையாக சேர்த்துள்ளார் போபண்ணா. 7-வது முறையாக ஒலிம்பிக்கில் களமிறங்கும் 42 வயதான பயஸுக்கு இதுவே கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கும். அதேநேரத்தில் போபண்ணா இன்னொரு ஒலிம்பிக்கில் விளையாட முடியும் என்றாலும், அப்போது அவருக்கு பயஸ் போன்ற ஒரு வலுவான இணை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

42 வயதிலும் பயஸ் நேர்த்தியான ஆட்டக்காரராக உள்ளார். போபண்ணாவும் நல்ல பார்மில் இருக்கிறார். இந்த ஜோடி மனஸ்தாபங்களை மறந்து களத்தில் ஜொலிக்கும் பட்சத்தில் நிச்சயம் பதக்கம் கிடைக்கும்.

இரட்டையர், கலப்பு இரட்டையர் என இரு பிரிவுகளிலும் சேர்த்து 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றிருக்கிறார் பயஸ். போபண்ணா இதுவரை கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வென்றதில்லை என்றாலும், அவரைக் குறைத்து மதிப்பிட முடியாது. சர்வதேச அளவில் 14 இரட்டையர் பட்டங்கள் வென்றிருக்கிறார்.

கலப்பு இரட்டையர் பிரிவில். இந்த முறை சானியா மிர்சாவும், ரோகன் போபண்ணாவும் இணைந்து களமிறங்குவதால் இந்தியா நிச்சயம் பதக்கம் வெல்லக்கூடும் என கருதப்படுகிறது.

மகளிர் இரட்டையர் தரவரிசையில் சானியா மிர்சா முதலிடத்தில் இருக்கிறார். இந்த சீசனில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் உள்ளிட்ட முக்கியப் போட்டிகளில் வென்றிருக்கிறார். தொடர்ச்சியாக 41 ஆட்டங்களில் வென்று சாதித்ததோடு, கடந்த இரு ஆண்டுகளாகவே உச்சக்கட்ட பார்மிலும் உள்ளார்.

அதேநேரத்தில் போபண்ணா ஆடவர் இரட்டையர் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கிறார். போபண்ணா, சானியா இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. நிறைய போட்டிகளில் ஒன்றாக இணைந்து ஆடிய அனுபவம் கொண்டவர்கள். போபண்ணா ஆடுகளத்தில் இடதுபுறம் ஆடக்கூடியவர். சானியா மிர்சா ஆடுகளத்தின் வலதுபுறம் ஆடக்கூடியவர். இது போபண்ணா-சானியா ஜோடிக்கு கூடுதல் பலமாகும்.

தாம்ப்ரே

மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா வுடன் பிரார்த்தனா தாம்ப்ரே இணைந்து விளையாடுகிறார். தாம்ப்ரே அனுபவமற்றவர் என்பது சற்று பின்னடைவுதான்.

தரவரிசையில் 198-வது இடத்தில் இருக்கும் தாம்ப்ரே, ஐடிஎப் போட்டியில் இரட்டையர் பிரிவில் 17 பட்டங்கள் வென்றிருந்தாலும், ஏடிபி போட்டிகளில் விளையாடிய அனுபவம் கிடையாது. 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் சானியாவும், தாம்ப்ரேவும் இணைந்து வெண்கல பதக்கம் வென்றனர். இரட்டையர் பிரிவில் தாம்ப்ரே முன்னணி வீராங்கனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதை பொறுத்தே ஆட்டத்தின் முடிவு இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x