Published : 25 Aug 2016 09:31 AM
Last Updated : 25 Aug 2016 09:31 AM

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற சாக் ஷி மாலிக்குக்கு உற்சாக வரவேற்பு: ஹரியாணா அரசு ரூ.2.5 கோடி பரிசுத் தொகை வழங்கியது

ரியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக் ஷி மாலிக் நேற்று காலை தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்திராகாந்தி விமான நிலை யத்தில் அவரது வருகைக்காக காத்திருந்த பெற்றோர், குடும்பத் தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாக்‌ ஷிக்கு பூங்கொத்து களை அளித்து வரவேற்றனர். ஒலிம்பிக்கில் வென்ற வெண்கலப் பதக்கத்தை அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் உயர்த்தி காட்டிய சாக்‌ ஷி மாலிக், தனது தந்தை சுக்பிர் மாலிக்கை கட்டியணைத்தவாறு ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.

உணர்ச்சி வசம்

சாக் ஷி கூறும்போது, எனக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஒலிம் பிக்கில் நான் பதக்கம் வெல்ல பிரார்த்தனை செய்தவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது கனவாக இருந்தது. இதற்காக கடுமையாக உழைத்தேன். தற்போது பதக் கத்தை பெற்றுள்ளேன். எனது தந்தையை கட்டியணைத்தபோது அவர் பதக்கத்தை பார்த்ததும் ஆனந்தத்தில் அழுதுவிட்டார். எனது குடும்பத்தினர் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். பதக்கத்துடன் என்னை நேரில் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சிய டைந்தனர்.

சமவாய்ப்பு

எனது பயிற்சியாளர்களும், பெற் றோருமே இந்த கனவு நிறைவேற பக்கபலமாக இருந்தனர். சுஷில் குமார், யோகேஷ்வர் தத் போன்ற மூத்த மல்யுத்த வீரர்களும் எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தனர். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்று கொண்டேன்.

பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஆண்களை போல சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் தேர்வு செய் யும் துறையால் நாடு நிச்சயம் பெருமை அடையும். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என்று நினைத்தேன்.

நிறைவு விழாவில் தேசிய கொடியை ஏந்திச் சென்றதை நம்பவே முடியவில்லை. கொடியை கைகளில் ஏந்தி சென்றது மிகவும் பெருமிதமாக இருந்தது. வரும் 29-ம் தேதி குடியரசு தலைவரின் கையால் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெருவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்’’என்றார்.

ரூ.2.5 கோடி பரிசு

பின்னர் டெல்லியில் இருந்து சொந்த மாநிலமான ஹரியாணா வுக்கு சென்ற சாக் ஷிக்கு அவரது சொந்த ஊரான மொஹ்ராவில் மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். இதையயடுத்து பகதூர்கர் நகரில் ஹரியாணா மாநில அரசு சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சாக் ஷி கலந்து கொண்டார்.

விழாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார், சாக் ஷிக்கு வாழ்த்து தெரிவித்து ரூ.2.5 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையை அவரிடம் வழங்கினார். தொடர்ந்து மனோகர்லால் கட்டார் பேசும்போது,

‘‘பெண்கள் நாட்டுக்காக பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்துள்ளனர். எங்கள் அரசு விளையாட்டை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சாக் ஷியின் சொந்த கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.

அரசு வேலை

சாக் ஷி தற்போது ரயில்வே ஊழியராக உள்ளார். விரைவில் அவருக்கு பதவி உயர்வு கிடைக்கும். அவர் விருப்பப்பட்டால் ஹரியாணா அரசில் 2-ம் நிலை பணி வழங்க தயாராக உள்ளோம். இந்த விஷயத்தில் அவரே சொந்த முடிவு எடுத்துக்கொள்ளலாம்’’ என்றார்.சாக் ஷி பேசும்போது,

‘‘எதிர்காலத்திலும் இதேபோன்று அனை வரும் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இதனால் நாட்டுக்காக மேலும் பல பதக்கங்களை என்னால் வெல்ல முடியும்" என்றார்.

சிந்து பெயரை மறந்த முதல்வர்

விழாவில் மனோகர் லால் கட்டார் பேசும்போது, பாட்மிண்டனில் வெள்ளி வென்ற சிந்து பெயரை குறிப்பிட நினைத்தார். ஆனால் பெயர் மறந்துவிட்டது. எனவே கர்நாடகாவை சேர்ந்த வெள்ளி வென்ற வீராங்கனைக்கும் வாழ்த்து என கூறி சமாளித்தார். உண்மையில், சிந்து ஹைதராபாத்தை சேர்ந்தவர். ஏற்கெனவே அவர் தெலுங்கானாவுக்கு சொந்தமா, ஆந்திராவுக்கு சொந்தமா என இரு மாநிலத்தவர்களும் போட்டி போடும் நிலையில் உள்ளனர். இதில் ஹரியாணா முதல்வர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x