

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் டிவில்லியர்ஸ், விராட் கோலி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் முதலிடம் பிடித்தார்.
வார்னர் முதலிடம் பிடிக்க டிவில்லியர்ஸ், விராட் கோலி ஆகியோர் 2 மற்றும் 3-ம் இடத்தில் உள்ளனர்.
டேவிட் வார்னருக்கு பாகிஸ்தான் பந்து வீச்சு வாரி வாரி வழங்கியதையடுத்து அவர் சிட்னியில் 130 ரன்களையும், அடிலெய்டில் 179 ரன்களையும் விளாசினார். மேலும் டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 284 ரன்களைச் சேர்த்தது ஆஸ்திரேலியாவின் புதிய ஒருநாள் சாதனை, எந்த ஒரு விக்கெட்டுக்குமான அதிகபட்ச கூட்டணி ரன்களாகும் இது.
மேலும் ஆஸ்திரேலிய கோடைக்கால கிரிக்கெட் சீசனில் 4 சதங்களை எடுத்த வீரர் என்ற பெருமையையும் டேவிட் வார்னர் பெற்றார்.
அடிலெய்ட் போட்டியில் நேற்று சதம் அடித்த பாகிஸ்தானின் பாபர் ஆஸம் ஒருநாள் தரவரிசையில் 10-ம் இடத்திற்கு முன்னேறினார்.
2013-க்குப் பிறகு சதம் அடித்த தோனி பேட்டிங்கில் ஒரு இடம் முன்னேறி 13-ம் இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 12-ம் இடத்திலும் ஷிகர் தவண் 14-ம் இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்து வரும் கேதார் ஜாதவ் 57 இடங்கள் முன்னேறி 47-ம் இடத்துக்கு வந்துள்ளார்.
ஒருநாள் பவுலிங் தரவரிசையில் டிரெண்ட் போல்ட் முதலிடம் வகிக்கிறார், இவரை விரைவில் நெருங்கும் விதமாக மிட்செல் ஸ்டார்க் 2-ம் இடத்தில் உள்ளார். அமித் மிஸ்ரா, அஸ்வின் ஆகியோர் முறையே 14 மற்றும் 19-ம் இடத்தில் உள்ளனர்.
ஒருநாள் பேட்டிங் தரவரிசை டாப் 10:
வார்னர், டிவில்லியர்ஸ், கோலி, டி காக், வில்லியம்சன், ஜோ ரூட், ஹஷிம் ஆம்லா, ஸ்டீவ் ஸ்மித், மார்டின் கப்தில், பாபர் ஆஸம்.
பவுலிங் தரவரிசை டாப் 10:
டிடெண்ட் போல்ட், மிட்செல் ஸ்டார்க், இம்ரான் தாஹிர், சுனில் நரைன், ஜோஷ் ஹேசில்வுட், ஷாகிப் அல் ஹசன், மேட் ஹென்றி, கேகிசோ ரபாடா, அடில் ரஷித், மொகமது நபி.