Published : 23 Jan 2017 10:49 AM
Last Updated : 23 Jan 2017 10:49 AM

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: 5 ரன்களில் இங்கிலாந்து வெற்றி

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - இங்கிலாந்து அணி களுக்கு இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா வில் நேற்று நடைபெற்றது. டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பீல்டிங் செய்யத் தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராய், பில்லிங்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

முதல் 2 போட்டிகளில் இந்தியா விடம் தோற்றதால் நேற்றைய ஆட்டத்தை இங்கிலாந்து அணி கவனமாக எதிர்கொண்டது. விக் கெட்டை பறிகொடுக்காமல் கவன மாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்களை எடுத்தது. அதன் பிறகு அந்த அணியின் ரன் எடுக்கும் வேகம் கூடியது. 41 பந்துகளை சந்தித்து ராய் 50 ரன்களை எடுக்க இங்கிலாந்தின் ரன் ரேட் கூடத் தொடங்கியது. இங்கிலாந்தின் ஸ்கோர் 98 ரன்களாக இருந்த போது பில்லிங்ஸின் (35 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தி, அதன் வேகத் துக்கு ஜடேஜா முட்டுக்கட்டை போட்டார். அவரை அவுட் ஆக்கிய சில நிமிடங்களிலேயே ராயின் (65 ரன்கள்) விக்கெட்டையும் ஜடேஜா கைப்பற்றினார்.

குறைந்த இடைவெளியில் 2 விக்கெட்கள் வீழ்ந்ததால் சற்று தடுமாறிய இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோவ் - மோர்கன் கூட்டணியால் மீண்டும் தலை நிமிர்ந்தது. கட்டாக்கில் நடந்த ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன், இப்போட்டியிலும் 3 சிக்சர்களையும், 2 பவுண்டரிகளை யும் அடித்து பயம் காட்டினார். அவரது வேகம் கூடுவதற்குள் பாண்டியா அவரை அவுட் ஆக்கினார். 44 பந்துகளில் 43 ரன்களைச் சேர்த்த மோர்கன் பாண்டியாவின் பந்தில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 194.

மோர்கனைத் தொடர்ந்து பேர்ஸ்டோவ் (56 ரன்கள்), பட்லர் (11 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்களையும் பாண்டியா வீழ்த்தினார். மேலும் மொயின் அலியின் (2 ரன்கள்) விக்கெட்டை பும்ரா வீழ்த்த ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸும் (57 ரன்கள்), வோக்ஸும் (34 ரன்கள்) மின்னல் வேகத்தில் ஆட இங்கிலாந்து அணி கடைசி 7 ஓவர்களில் 75 ரன்களைச் சேர்த்தது. 50 ஓவர்களின் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்களை குவித்தது. இந்திய அணியில் பாண்டியா அதிகபட்ச மாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

வெற்றிபெற 322 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த இந்திய அணி 13 ரன்களை சேர்த்திருந்த நிலையில் ரஹானேவின் (1 ரன்) விக்கெட்டை இழந்தது. இதைத்தொடர்ந்து லோகேஷ் ராகுலுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

கடந்த சில போட்டிகளாக சரியாக ஆடாமல் இருந்த லோகேஷ் ராகுல் இந்த போட்டியிலாவது ரன்களைச் சேர்ப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்ப்பை பொய்யாக்கிய லோகேஷ் ராகுல் 11 ரன்களில் ஆட்டம் இழந்தார். 2 விக்கெட் போன நிலையிலும் உறுதியாக ஆடிய கேப்டன் விராட் கோலி, 54 பந்துகளில் தனது அரை சதத்தைக் கடந்தார். ஆனால் அதன் பிறகு நிலைத்து ஆடாமல் 54 ரன்களில் ஸ்டோக்ஸின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

விராட் கோலியின் விக்கெட் வீழ்ந்ததைத் தொடர்ந்து யுவராஜ் சிங்குடன், தோனி ஜோடி சேர்ந்தார். ஆனால் கடந்த ஆட்டத்தைப் போல இப்போட்டியில் யுவராஜ் - தோனி ஜோடி ஜொலிக்கவில்லை. 45 ரன்களைச் சேர்த்து யுவராஜ் சிங்கும், 25 ரன்களில் தோனியும் ஆட்டம் இழக்க 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் என்று இந்தியா தடுமாறியது.

முன்னணி வீரர்கள் அவுட் ஆன நிலையில் அணியை மீட்கும் முயற்சியில் கேதார் ஜாதவும், ஹர்திக் பாண்டியாவும் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் சிறிது நேரம் பொறுமையாக ஆடிய இந்த ஜோடி, பிறகு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துகளை விளாசத் தொடங்கியது. இதனால் இந்திய அணி முன்னேறத் தொடங்கியது. கடைசி 10 ஓவர்களில் 93 ரன்களை எதுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலைக்கு இந்திய அணி வர ஆட்டம் பரபரப்பானது.

ஜாதவ் - பாண்டியா ஜோடியின் ஆட்டத்தால் பதற்றமான இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பீல்டிங்கை மேலும் பலப்படுத்தி, பந்துவீச்சாளர்களை மாற்றிப் பார்த்தார்.

28 பந்துகளில் வெற்றிக்கு மேலும் 45 ரன்கள் தேவை என்ற நிலை யில் பாண்டியா (56 ரன்கள்) அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து ஜடேஜாவும் (10 ரன்கள்), அஸ் வினும் (1 ரன்) அவுட் ஆக இங்கி லாந்தின் கை மீண்டும் ஓங்கியது. கடைசி நம்பிக்கையான கேதார் ஜாதவும் 90 ரன்களில் அவுட் ஆக இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 316 ரன்களை எடுத்து தோற்றது. இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x