

இங்கிலாந்துக்கு எதிராக பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவு சோபிக்க முடியாமல் போனதற்கான உத்தி ரீதியான தவறுகள் என்னவென்பதை முரளி விஜய் பகிர்ந்து கொண்டுள்ளார்.
விரல் மற்றும் தோள்பட்டைக் காயத்திலிருந்து மீண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கும் தொடக்க வீரரான முரளி விஜய்,
தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டி வருமாறு:
இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட்களில் தொடக்க நகர்வில் முன்னதாகவே முன்காலை முன்னால் நகர்த்தினேன். அது எனக்கு சரிப்பட்டு வரவில்லை. இதனால் பந்து பவுன்ஸ் ஆகும் போது எனக்கு பிரச்சினைகள் எழுந்தது. இதனையடுத்து பின்னங்காலை குறுக்காக பின்னால் நகர்த்தும் வழக்கமான பாணிக்கு மாறினேன்.
மேலும், பேட் ஸ்விங்கை கூடியமட்டும் நேராக வருமாறு பயிற்சிகள் மேற்கொண்டுள்ளேன். நல்ல கால்நகர்த்தல், தலையை நேராக வைத்திருப்பது, பேட் ஸ்விங் மிக மிக முக்கியமானது.
நான் ஒரு நல்ல பேக்ஃபுட் பேட்ஸ்மன், ஆனால் ஒரு பவுலர் மணிக்கு 145 கிமீ வேகத்தில் வீசும் போது கிரீஸிற்குள் டீப்பாக கால்களை உட்புறமாக நகர்த்தி ஆடுவது சரிப்பட்டு வராது. அப்போது சூழலுக்கேற்றவாறு உடல் எடையை முன்னங்காலுக்கோ, பின்னங்காலுக்கோ மாற்ற வேண்டும்.
நமது ‘ஸ்டான்ஸ்’ என்பதிலிருந்துதான் அனைத்தும் தொடங்குகிறது. நானும் நுட்பமான மாற்றங்களை இதில் செய்யக்கூடியவன் தான். உதாரணமாக ஆஸ்திரேலியாவில் பந்துகள் கொஞ்சம் கூடுதலாக எழும்பும்போது நான் நேராக நிமிர்ந்து நிற்கும் ஸ்டான்ஸை கடைபிடிப்பேன். இந்தியாவில் பந்துகள் பவுன்ஸ் அவ்வளவாக ஆகாது என்பதால் சற்றே குனிந்து நிற்பேன்.
முதல் நாள் பிட்சில் இன்னிங்ஸ் தொடக்கக் கட்டத்தில் கால்நகர்த்தலை அட்ஜஸ்ட் செய்வது கடினம். எனவே ஃபுல் லெந்த் பந்தில்தான் கவனம் செலுத்த வேண்டும், ஷார்ட் பிட்ச் பந்து வந்தால் நம் இயல்பான உந்துதல் நமக்கு கைகொடுக்கும்.
தொடக்கத்தில் ஆடுவது என்பது ஏகப்பட்ட நிச்சயமின்களை எதிர்கொள்வதாகும், இந்த ஒரு தன்மை எனக்கு பிடித்தமானது. தீவிரமான பவுலிங் காலக்கட்டங்களைக் கடந்து பல்லைக் கடித்து கொண்டு ஆடி பெரிய இன்னிங்ஸ் ஆடுவதைப் போன்ற திருப்தி வேறு எதுவும் இல்லை.
தொடக்கத்தில் களமிறங்கி விரைவில் ஆட்டமிழந்தால் பெவிலியனில் சும்மாவே இருந்து கொண்டிருக்க வேண்டும், இது எனக்கு அறவே பிடிக்காத விஷயம்.
இவ்வாறு கூறிய முரளி விஜய், அபினவ் முகுந்த் மீண்டும் அணிக்கு வந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார், மிட்செல் ஸ்டார்க்கின் ஆக்ரோஷ பந்து வீச்சுக்கான வலுவான உத்தியுடன் தயாராக இருப்பதாக முரளி விஜய் தெரிவித்தார்.