

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பெர்த் ஒருநாள் போட்டியில் காயமடைந்த ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆடுவதும் சந்தேகமாகியுள்ளது.
பெர்த்தில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தொடையின் பின்பகுதி தசைநார் பிரச்சினை காரணமாக அவர் தொடர்ந்து ஆட முடியாமல் போனது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார்.
அவரது காயம் இந்திய அணிக்கு எதிரான பிரிஸ்பன் டெஸ்ட் வரை நீடிக்குமானால் அவரால் அந்த டெஸ்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் தோனி ஏற்கெனவே பிரிஸ்பன் டெஸ்டில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளபோது ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் அந்த டெஸ்டில் விளையாடுவதும் இப்போது சந்தேகமாகியுள்ளது.
இதற்கிடையே உலகக் கோப்பை போட்டிகளில் கிளார்க் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், ஜார்ஜ் பெய்லியின் கேப்டன்சியை நாங்கள் வரவேற்போம், அவருக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கிளார்க்கிற்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.