Published : 18 Jun 2017 11:28 AM
Last Updated : 18 Jun 2017 11:28 AM

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? - பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை, வெற்றி பெறும் அணிக்கு ரூ.14 கோடி பரிசு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் தனது பரம வைரியான பாகிஸ்தான் அணியுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

அண்டை நாடுகள் இடையிலான பதற்றமான அரசியல் உறவுகள், கடுமையான போட்டிக்கு வண்ணங்கள் சேர்க்கின்றன. மேலும் மத்திய அரசு, பாகிஸ்தான் அணியுட னான இருதரப்பு போட்டிக்கு அனுமதி மறுத்து வருவதால், உலகளாவிய அளவிலான தொடர் களில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை உள்ளது.

இதுவும் இன்றைய இறுதிப் போட்டியின் சுவாரஸ்யத்தை அதி கரித்துள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணி இந்த தொடரில், பரம வைரியான பாகிஸ்தான் அணியை விட மிகச் சிறப்பாகவே விளையாடி வருகிறது.

பரபரப்பு தருணங்கள்

சர்ப்ராஸ் அகமது தலைமை யிலான பாகிஸ்தான் அணி இந்த தொடரில் சில திருப்புமுனைகளை ஏற்படுத்திய போதிலும், இறுதிப் போட்டிக்காக நாங்கள் கூடுதலாக எதுவும் செய்ய வேண்டியது இல்லை, எப்போதும் போன்று மற்றொரு ஆட்டமாகவே கருது வோம் என அரை இறுதி ஆட்டம் முடிவடைந்ததும் விராட் கோலி அறிவித்திருந்தார்.

1980 மற்றும் 1990 காலக் கட்டங்களில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டங்கள் பெரும்பாலும் கடைசி வரை உச்சக்கட்ட பரபரப்புடனே அமைந்திருக்கிறது. 1986 ஆசிய கோப்பையில் சேத்தன் சர்மா வீசிய கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜாவித் மியான்தத் சிக்ஸர் விளாசி பாகிஸ்தான் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்த நிமிடங்கள் இந்திய ரசிகர்களின் மனதை சுக்குநூறாக நொறுக்கியே இருக்கும்.

இந்த பரபரப்பு அடுத்த தலைமுறை வீரர்கள் விளையாடும் போதும் குறையவில்லை. 2003 உலகக் கோப்பையில் செஞ்சுரியன் நகரில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் சேர்த்த 98 ரன்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

அஜேய் ஜடேஜா, வெங்கடேஷ் பிரசாத், ரிஷிகேஷ் கனிட்கர், ஜோகிந்தர் சர்மா உள்ளிட்டோரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டங்களில் த்ரில் வெற்றி பெற்ற தில் பெரிய பங்கு வகித்துள்ளனர்.

போட்டி நடைபெறும் இடங்க ளாக டெல்லி, இஸ்லாமாபாத், கராச்சி, கொல்கத்தா என எதுவாக இருந்தாலும் இரு நாட்டு ரசிகர்களும் தங்களது அணி தோல்வி அடைவதை வெறுக்கவே செய்கிறார்கள். அந்த அளவுக்கு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்துக்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

இரு அணிகளை சேர்ந்த 22 வீரர்களை பொறுத்தவரையில் இது கிரிக்கெட்டில் ஒரு ஆட்டம் அவ்வளவுதான். ஆனால் அவர் களை பின்தொடரும் கோடிக் கணக்கான ரசிகர்கள் அதையும் தாண்டி செல்கிறார்கள். அதே வேளையில் போட்டி முடிவடைந்த தும் சமாதானமில்லாத அன்பும், நியாயமற்ற விமர்சனங்களும் சமமாகவே இருக்கும்.

திறன் ஒப்பீடு

துல்லியமான கிரிக்கெட்டில் தர்க்க ரீதியாக, குறுகிய வடிவிலான போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி யுடன் பாகிஸ்தான் அணி எந்த வகையிலும் சமமாக இல்லை.

ஆனால் கிரிக்கெட் வாழ்க்கை யில் சில நேரங்களில் யதார்த்தங்கள், தர்க்கத்தை தடுக்கின்றன. இதனால் திறன் குறைவு என்பதற்காக சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியை முற்றிலும் நிராகரித்து விட முடியாது.

இந்த தொடரின் முதல் மோதலில் பாகிஸ்தான் அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றிருந்தது. தரநிலையிலும், ஆட்டத் திறனிலும் பாகிஸ்தான் அணி பின் தங்கியதால் வழக்கமாக மோதும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் காணப்படும் கம்பீரம் இழக்கப்பட்டதாகவே பெரும் பாலான ரசிகர்கள் கருதினர்.

இரு அணி வீரர்களின் திறன் களை ஒப்பிட்டால் இதற்கான தீர்வு கிடைக்கும். அசார் அலி, அகமது ஷேசாத் ஆகியோரை தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வரும் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஜோடியுடன் ஒருபோதும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. பாபர் அஸாம் கிரிக்கெட்டில் இன்னும் குழந்தை தான். ஆனால் விராட் கோலி அதிவிரைவாக 8 ஆயிரம் ரன்களை கடந்து வியக்க வைத்துள்ளார்.

தனி ஊசல்

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஒரு தனி ஊசல் போன்றது. புத்திசாலிதனத்துக்கும், சாதாரணத் துக்கும் இடையே சுற்றுகிறது. எந்தவித பகுப்பாய்வுகளையும் அந்த அணி போட்டியின் தினத்தில் கேலிக் கூத்தாக்கி விடும் என்பதும் ஒருபுறம் உண்மை.

தொடக்க வீரரான பஹர் ஸமான் இந்த தொடரில் அதிரடியாக விளையாடி வருகிறார். லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இடம் பெறாத அவர் அதன் பின்னர் பங்கேற்ற 3 ஆட்டங்களில் இரு அரை சதங்கள் அடித்துள்ளார். இதில் இலங்கைக்கு எதிராக 36 பந்துகளில் அரை சதம் அடித்து மிரட்டியிருந்தார். இவர் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு தொல்லைத் தரக்கூடும்.

வேகப் பந்து வீச்சாளர்களான முகமது அமிர், ஹசன் அலி, ஜூனைத் கான், ருமான் ரயீஸ் ஆகியோரிடம் வரலாற்றை மாற்றி அமைக்கும் திறன் இருப்பதாக கருதப்படுகிறது. இவர்களில் ஹசன் அலி (10) இந்த தொடரில் அதிக விக்கெட்கள் கைப்பற்றியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் அறிமுக வீரராக இடம் பெற்றாலும் ருமான் ரயீஸ் சிறந்த திறனை வெளிப்படுத்தினார். இதற்கு முன்னர் 4 ஆட்டங்களில் 3 முறை விராட் கோலி விக்கெட்டை கைப்பற்றி உள்ள ஜூனைத் கான் மீண்டும் நெருக்கடி கொடுக்க முயற்சிப்பார்.

ஷிகர் தவண்

ஐசிசி தொடர்களில் (50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி 20 உலகக் கோப்பை) இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மோசமான சாதனைகளையே வைத்துள்ளது. இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடி இரு வெற்றிகளை மட்டுமே பெற் றுள்ளது. இதுவும் இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்து முதல் இரு இடங்களில் உள்ள ஷிகர் தவண் (317), ரோஹித் சர்மா (304) ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும் என கருதப்படுகிறது. ரன் குவிப்பு பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள விராட் கோலியும் (253) அசத்த காத்திருக்கிறார்.

சிக்கனம்

தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் திறன்கள் இந்த தொடரில் இதுவரை சோதிக்கப்படவில்லை. ஆனால் இவர்கள் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் என்பதால் நிலைமைக்கு தகுந்தபடி சிறந்த திறன்களை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள்.

தரம் வாய்ந்த வேகப் பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இந்த தொடரில் ஓவருக்கு சராசரி யாக 5 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கி உள்ளனர். பந்து வீச்சின் அடிப்படையை பூர்த்தி செய்யும் இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு ‘சிக்கனத்தை’ (குறைந்த ரன்கள் வழங்குவது) எதிர்பார்க்கலாம். ரவீந்திர ஜேடேஜாவின் ஆல்ர வுண்டர் திறன், ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் ஆகியோரின் பன்முக திறன்கள் இந்திய அணியை முழுமை அடையச் செய்துள்ளது.

ரூ.14 கோடி பரிசு

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி தக்க வைத்துக்கொள்ளும் பட்சத்தில், அந்த பெருமை அடுத்து நடைபெற உள்ள ஐசிசி வருடாந்திர மாநாட்டில் இழந்த பெருமையை மீட்கவும், மீண்டும் ஆதிக்கம் செலுத் தவும் இந்தியாவுக்கு உதவக்கூடும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.14 கோடியும், 2-ம் இடம் பெறும் அணிக்கு ரூ.7 கோடியும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

அணிகள் விவரம்

இந்தியா:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

பாகிஸ்தான்:

சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), பஹர் ஸமான், அகமது ஷேசாத், அசார் அலி, பாபர் அசாம், ஷோயிப் மாலிக், முகமது ஹபீஸ், ஹாரிஸ் சோகையில், பாஹிம் அஸ்ரப், ஹசன் அலி, இமாத் வாசிம், ஜூனைத் கான், ருமான் ரயீஸ், முகமது அமிர், ஷதப் கான்.

நன்றி: ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ தமிழ்



இடம்: லண்டன்

நேரம்: பிற்பகல் 3

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்



4-வது முறையாக

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் 4-வது முறையாக விளையாட உள்ளது. 2000-ம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற தொடரில் நியூஸிலாந்திடம் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது.

2002-ல் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டதால் இலங்கை அணியுடன் இணைந்து கோப்பையை பகிர்ந்து கொண்டது. 2013-ல் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

129-வது முறையாக மோதல்

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 128 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் பாகிஸ்தான் 72 ஆட்டங்களிலும், இந்தியா 52 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.

கடைசியாக விளையாடிய 10 ஆட்டங்களில் இந்தியா 7 வெற்றிகளையும், பாகிஸ்தான் 3 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. 2015-க்கு பிறகு மோதிய இரு ஆட்டங்களிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியில் இரு அணிகளும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் ஒரு ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது.

வேகங்களே அதிகம்

போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற லிஸ்ட் ஏ போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் 214 விக்கெட்களும், சுழற்பந்து வீச்சாளர்கள் 23 விக்கெட்களும் கைப்பற்றி உள்ளனர்.

டாஸ் ராசி

ஓவல் மைதானத்தில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற லிஸ்ட் ஏ போட்டிகளில் முதல் இன்னிங்ஸ் ரன் குவிப்பு சராசரி 275 ஆகும். 2-வது இன்னிங்ஸ் பேட்டிங் சராசரி ரன் குவிப்பு 224 ஆகும்.

இங்கு நடைபெற்றுள்ள 24 ஆட்டங்களில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணிகள் 12 ஆட்டங்களிலும், டாஸ் வென்று 2-வது பேட் செய்த அணிகள் 8 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. 2 ஆட்டம் முடிவில்லாமல் போனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x