Published : 30 Jan 2014 12:03 PM
Last Updated : 30 Jan 2014 12:03 PM

முதல் டி20: ஆஸி வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் ஒயிட்-ஆரோன் பிஞ்ச் ஜோடி, 2-வது ஓவரில் இருந்து அதிரடியில் இறங்கியது. 11 ரன்களில் ஆட்டமிழப்பதிலிருந்து தப்பிய ஒயிட், நொறுக்கித் தள்ளினார்.

மறுமுனையில் ஆரோன் பிஞ்ச் வெளுத்து வாங்க, சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தன. இதனால் முதல் 10 ஓவர்களில் 104 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. 11-வது ஓவரில் பிஞ்ச் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தார்.

அவரைத் தொடர்ந்து கேமரூன் ஒயிட் 43 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு கிளன் மேக்ஸ்வெல் 20, ஜார்ஜ் பெய்லி 14 ரன்களில் வெளியேறினர். கடைசிக் கட்டத்தில் கிறிஸ் லின் 19 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் மைக்கேல் லம்ப், லியூக் ரைட் ஆகியோர் தலா 9 ரன்களிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 22 (12 பந்துகளில்), இயோன் மோர்கன் 4, ஜோஸ் பட்லர் 20, ஜோ ரூட் 32 ரன்களில் ஆட்டமிழக்க 100 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கடைசி 48 பந்துகளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 113 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் போபாரா சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். ஆனால் மறுமுனையில் பிரெஸ்னன் 11, ஸ்டூவர்ட் பிராட் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 2 ஓவர்களில் 52 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19-வது ஓவரில் 3 பவுண்டரிகளை விரட்டினார் போபாரா. அதே ஓவரில் டெர்ன்பார்ச் (5 ரன்களில்) ரன் அவுட்டானார்.

கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டன. ஹேஸில்வுட் வீசிய அந்த ஓவரில் போபாரா 3 சிக்ஸர்களை விளாசியபோதும் பலனில்லை. அந்த ஓவரில் 24 ரன்கள் கிடைக்க, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது இங்கிலாந்து. இதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி கண்டது.

போபாரா 27 பந்துகளில் 7 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் கோல்ட்டர் நீல் 4 ஓவர்களில் 30 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x