Published : 29 Oct 2013 09:53 AM
Last Updated : 29 Oct 2013 09:53 AM

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று அறிவிப்பு

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடருடன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற இருப்பதால் இத்தொடர் குறித்த எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

சந்தீப் பாட்டீல் தலைமையிலான 5 பேர் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழுவினர் நாக்பூரில் செவ்வாய்க்கிழமையன்று வீரர் களைத் தேர்வு செய்ய இருக்கின்றனர். மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் நவம்பர் 6 முதல் 10-ம் தேதி வரை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 14 முதல் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது சச்சினின் 200-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியாகும்.

3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 21, 24, 27 ந்தேதியில் நடைபெறவுள்ளது. டெஸ்ட் தொடருக்கு முன்பு மேற்கிந்தியத்தீவுகள் அணி உத்தரப் பிரதேச மாநில அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்த 3 நாள் பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

ஜாகீருக்கு வாய்ப்பு கிடைக்குமா….

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கானுக்கு டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2011-ம் ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியதே அவர் பங்கேற்ற கடைசி டெஸ்ட் போட்டியாகும். காயம் காரணமாக உடல் தகுதியை இழந்ததால் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

இப்போது அவர் தனது உடல் தகுதியையும் பந்து வீச்சையும் பிரான்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா சென்று மேம்படுத்திக் கொண்டுள்ளார். இப்போது ரஞ்சி போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக களமிறங்கியுள்ளார். ரஞ்சி போட்டியில் அவர் விளையாடுவதை வைத்து அணிக்கு தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேவாக், கம்பீரின் நிலை

சேவாக், கம்பீர் ஆகியோரும் டெஸ்ட் அணியில் வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். எனினும் இவர்கள் இருவரும் உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடாதது பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்ட் போட்டியில் இப்போது புஜாரா, முரளி விஜய் தொடக்க வீரர்களாக உள்ளனர்.

அஸ்வின் ஓஜா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதால், ஹர்பஜன் சிங்குக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x