

இந்தியா - வங்கதேசம் இடையே நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 459 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டிய வங்கதேசம் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்ளையும் இழந்தது.
4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 103 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்திருந்தது. கடைசி நாளான இன்று ஆட்டம் தொடங்கிய 3-வது ஓவரிலேயே ஷகிப் அல் ஹசன் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
முதல் இன்னிங்ஸில் சதமடித்த முஷ்ஃபிகர் ரஹிம் 23 ரன்களுக்கு அஸ்வின் சுழலில் வீழ்ந்தார். உணவு இடைவேளையின் போது வங்கதேசம் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை எடுத்திருந்தது.
சிறப்பாக ஆடிய மஹமதுல்லா 115 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுமுனையில் சபீர் ரஹ்மான் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் மஹமதுல்லாவும் 64 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். 3 விக்கெட்டுகளே மீதமிருந்த நிலையில் இந்திய அணி புதிய பந்தை தேர்ந்தெடுத்தது.
சிறிது நம்பிக்கை அளித்த மெஹதியின் ஆட்டம் 23 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. டரிஜுல் இஸ்லாம் 6 ரன்கள், டஸ்கின் அகமது 1 ரன் என ஆட்டமிழக்க முடிவில் வங்கதேசம் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
விக்கெட் வீழ்ச்சி:
1-11(தமிம் இக்பால்), 2-71 (சவுமியா சர்க்கார்), 3-75 (மொமினுல் ஹக்), 4-106 (ஷாகிப் அல்-ஹசன்), 5-162 (முஸ்பிகுர் ரஹிம்), 6-213 (சபிர் ரஹ்மான்), 7-225 (மஹ்முதுல்லா), 8-242 (மெகதி ஹசன்), 9- 249 (தாஸ்ஜூல் இஸ்லாம்), 10-250 (தஸ்கின் அகமது).
பந்து வீச்சு:
புவனேஷ்வர் குமார் 8-4-15-0, அஸ்வின் 30.3-10-73-4, இஷாந்த் சர்மா 13-3-40-2, உமேஷ் யாதவ் 12-2-33-0, ஜடேஜா 37-15-78-4.
கவாஸ்கர் சாதனை முறியடிப்பு
விராட் கோலி தலைமையின் கீழ் இந்திய அணி 19 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வெற்றிகரமாக வலம் வருகிறது. இதற்கு முன்னர் 1976-80ல் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி 18 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்காமல் இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இதனை கோலி தலைமையிலான இந்திய அணி முறியடித்துள்ளது.
கோலி தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 6 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. இந்த வகை சாதனையில் இதற்கு முன்னர் 2008-10ல் தோனி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 5 தொடர்களை வென்றிருந்தது.
2015 ஆகஸ்டில் இலங்கை மண்ணில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. அதன் மேற்கிந்தியத் தீவுகளை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியிருந்தது இந்திய அணி. இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளுக்கு எதிராக உள்நாட்டு தொடரில் இந்திய அணி வெற்றி கண்டுள்ளது.
4-வது இன்னிங்ஸில் அஸ்வின் இதுவரை 50 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். இந்திய பந்து வீச்சாளர்களில் பிஷன்சிங் பேடி, அனில் கும்ப்ளே ஆகியோருக்கு பிறகு அஸ்வின் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த வெளிநாட்டு அணிகளில் கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி இரு இன்னிங்ஸ்களிலும் தலா 100 ஓவர்களுக்கு (முதல் இன்னிங்ஸ் 145.5 ஓவர், 2-வது இன்னிங்ஸ் 154 ஓவர்) மேல் பேட் செய்தது. அதன் பிறகு தற்போது வங்கதேச அணி இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 230 ஓவர்கள் விளையாடி உள்ளது.