

ஓவல் மைதானத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி இலங்கைக்கு எதிராக 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது.
தனது 25-வது ஒரு நாள் சதத்தை எட்டிய ஆம்லா 115 பந்துகளில் 5 நான்குகள் 2 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். 2-வது விக்கெட்டுக்காக ஆம்லா, டுபிளெசிஸ் (75 ரன்கள் 70 பந்துகள் 6 பவுண்டரிகள்) சேர்ந்து 21.3 ஓவர்களில் 145 ரன்களைச் சேர்க்க கடைசியில் டுமினி 20 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
முன்னதாக பவுலிங்கைத் தேர்ந்தெடுத்த இலங்கை மலிங்கா, லக்மல் மூலம் ஆம்லா, டி காக் ஆகியோரை கட்டிப்போட்டனர், அருமையான லைன் அண்ட் லெந்த் பந்து வீச்சில் 7-வது ஓவரில்தான் முதல் பவுண்டரியே அடிக்கப்பட்டது. பிறகு நுவான் பிரதீப் மிக அருமையாக வீசி டிகாக் டுபிளேசிஸ் விக்கெட்டுகளுடன் 10 ஒவர்களில் 54 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டி காக் இன்று சரியாக ஆடவில்லை, பிட்ச் சற்றே வேகம் குறைவாக இருந்ததால் அவர் 42 பந்துகளில் 23 ரன்களையே எடுக்க முடிந்தது.
டுபிளெசிஸும் 8 ரன்களில் அவுட் ஆகியிருப்பார், ஆனால் அவர் அடித்த ஹூக் ஷாட்டை லாங் லெக்கில் மலிங்க தவறாகக் கணித்து கோட்டை விட்டார்.
டுபிளெசிஸ் இறங்கியவுடன் ஆம்லா கொஞ்சம் சுதந்திரமாக ஆடினார், அசேலா குணரத்னேயை லாங் ஆஃபில் ஒரு சிக்சரையும் பிறகு சீகுகே பிரசன்னாவின் லெக் ஸ்பின்னை டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்தார் இந்த சிக்சர்களுக்கு இடையில்தான் அவர் அரைசதம் கண்டார்.
பிறகு 112 பந்துகளில் ஆம்லா 100 ரன்களை எட்டினார். சதம் அடித்த பிறகு மெண்டிஸின் அபார த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். முன்னதாக டுபிளெசிஸ் 75 ரன்களில் நுவான் பிரதீப் பந்தில் சந்திமாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இறங்கிய டிவில்லியர்ஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் சீகுகே பிரசன்னாவின் லெக் ஸ்பின் ஷார்ட் பிட்ச் பந்தை சற்று முன்கூட்டியே புல் ஆட முயன்றார் பந்து முன் மட்டை விளிம்பில் பட்டு ஆஃப் திசையில் அருகிலேயே கபுகேதராவின் கையில் கேட்ச் ஆனது.
அபாய வீரர் டேவிட் மில்லர் 22 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் லக்மல் பந்தில் பிரசன்னாவிடம் கேட்ச் ஆனார்.
மற்றொரு அபாய வீரர் கிறிஸ் மோரிஸ் 3 பவுண்டரிகளை விளாசி 20 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். கடைசியில் டுமினி 20 பந்துகளில் 5 பவுண்டரி கடைசி பந்து சிக்சருடன் 38 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா 299 ரன்களை எட்டியது. அவ்வப்போது பவுண்டரிகள் வராமல் வறண்டதால் தென் ஆப்பிரிக்கா 300 ரன்களைக் கடந்து செல்ல முடியவில்லை. தற்போது இலங்கை 6.1 ஓவர்களில் 44/0 என்று நல்ல தொடக்கம் கண்டுள்ளது. டிக்வெல்லா 27 ரன்களை எடுத்து அதிரடியாக ஆடி வருகிறார்.