Published : 15 Nov 2013 09:08 PM
Last Updated : 15 Nov 2013 09:08 PM

உலக செஸ்: 5-வது சுற்றில் ஆனந்தை வீழ்த்தினார் கார்ல்சன்

உலக செஸ் சாம்பியன்ஷிப் 5-வது சுற்றில் நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தினார் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன்.

சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டி ஐந்தரை மணி நேரம் வரை நீடித்த நிலையில், உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சன் தனது சாதுர்யமான ஆட்டத்தால் வெற்றி பெற்றார். ஆட்டத்தின் 58-வது நகர்த்தலின்போது, அவர் வெற்றியைத் தனதாக்கினார்.

கடந்த 4 சுற்றுகளும் டிராவில் முடிந்த நிலையில், இந்தத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் கார்ல்சன். இதன் மூலம் அவர் மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளார்.

இன்றைய போட்டியில் ஆனந்த், கார்ல்சன் இருவரும் 5-வது நகர்தலில் ஆளுக்கொரு சிப்பாயை கைப்பற்றினர். பின்னர், 10-வது நகர்த்தலில் தனது குதிரையை இழந்த ஆனந்த், கார்ல்சனின் பிஷப்பை கைப்பற்றினார். அடுத்தடுத்து அதிரடியாக ஆடி இருவரும் மாறி மாறி காய்களை வெட்டினர்.

அதைத் தொடர்ந்து 42-வது நகர்த்தலில் கார்ல்சன், ஆனந்தின் ஒரு சிப்பாயை கைப்பற்றி அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். கார்ல்சனின் ராஜாவுக்கு தனது யானையால் செக் கொடுத்து 49-வது நகர்த்தலில் மேலும் ஒரு சிப்பாயை பறிகொடுத்தார் ஆனந்த். 58-வது நகர்த்தலில் ஆனந்த் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

சென்னையில் வரும் சனிக்கிழமை நடைபெறும் 6-வது சுற்றில் ஆனந்த், வெள்ளைக் காயுடன் களமிறங்குகிறார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x