

கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியில் ஜுவாலா கட்டா, டெல்லி ஸ்மாஷர்ஸ் அணிக்காக விளையாடினார். அதில் பங்கா பீட்ஸ் அணி, போட்டிக்கு முன்னதாக வீரரை மாற்றியதால், போட்டியில் விளையாட முடியாது என மிரட்டல் விடுத்த ஜுவாலா, டெல்லி அணியின் மற்ற வீரர்களையும் விளையாட விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அது தொடர்பாக விசாரணை நடத்திய இந்திய பாட்மிண்டன் சங்க ஒழுங்கு நடவடிக்கைக் குழு அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கலாம் அல்லது குறிப்பிட்ட காலம் வரையில் சஸ்பெண்ட் செய்யலாம் என பரிந்துரைத்தது.
இந்த நிலையில் அதை எதிர்த்து ஜுவாலா கட்டா தில்லி உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு தொடுத்துள்ளார். அது தொடர்பாக அவருடைய தந்தை கிராந்தி கட்டா கூறுகையில், “இந்திய பாட்மிண்டன் சங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்றார்.
இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.