கேப்டன்சியிலிருந்தும் அணியிலிருந்தும் நீக்கம்: இருமுறை டி20 உலகக்கோப்பை வென்ற டேரன் சமி ஏமாற்றம்

கேப்டன்சியிலிருந்தும் அணியிலிருந்தும் நீக்கம்:  இருமுறை டி20 உலகக்கோப்பை வென்ற டேரன் சமி ஏமாற்றம்
Updated on
1 min read

இரண்டு முறை மே.இ.தீவுகள் அணியை டி20 உலகக்கோப்பை சாம்பியன் தகுதிக்கு தனது தலைமையில் உயர்த்திய டேரன் சமியின் ஆட்டம் அணியில் நீடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்று மே.தீவுகள் வாரியம் அவருக்கு அறிவுறுத்திவிட்டது.

இதனையடுத்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், மே.இ.தீவுகள் அணித்தேர்வுக்குழு தலைவர் சமியின் ஆட்டத்தில் திருப்தியில்லை என்றும், அணியில் ஒரு வீரராக நீடிக்க தகுதியை இழந்தார் என்றும் தன்னிடம் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் சமி கூறியதாவது:

நேற்று (4ம் தேதி) காலை தேர்வுக்குழு தலைவரிடமிருந்து அழைப்பு வந்தது, 30 விநாடிகள்தான் பேசியிருப்போம். என்னுடைய கேப்டன்சியை மதிப்பீடு செய்ததாகவும், டி20 கேப்டனாகவோ, அணியிலோ இனி நான் நீடிக்கப்போவதில்லை என்று கூறியதோடு, என்னுடைய ஆட்டம் அணியில் நீடிப்பதற்கான தகுதியில் இல்லை என்றும் தெரிவித்தார்.

இது சரிதான். மே.இ.தீவுகள் கிரிக்கெட் ஒரு போதும் டேரன் சமியைப் பற்றியதல்ல என்று நான் நம்பி வந்துள்ளேன். எதிர்காலத்தை அவர் நோக்குகின்றனர், புதிய கேப்டனுக்கு எனது வாழ்த்துக்கள்.

இரண்டு டி20 உலகக்கோப்பையை வென்றது எனது கிரிக்கெட் வாழ்வின் முக்கிய அம்சமாக கருதுகிறேன். இந்த நினைவுகளை நான் நீண்ட காலம் என்னுள் தாங்கிச் செல்வேன். ஒருநாள் போட்டியிலிருந்தோ, டி20-யிலிருந்தோ ஓய்வு பெறும் முடிவு என்னுடையதல்ல. ரசிகர்களுக்கும், என்னுடன் ஆடிய வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மே.இ.தீவுகள் வாரியம் 6 ஆண்டுகள் என்னை கேப்டன்சியில் அனுமதித்தது. இப்போதைக்கு கேப்டன்சி முடிவுக்கு வந்துள்ளது. ரசிகர்களுக்கு நன்றி.

எப்போது களத்தில் இறங்கினாலும் முழு உணர்வுடன், அர்ப்பணிப்புடன் ஆடியுள்ளேன்.

ஓட்டிஸ் கிப்சனுடன் நான் ஆரம்பித்தேன் தற்போது பில் சிம்மன்ஸுடன் முடிவுக்கு வந்துள்ளது. என் காலக்கட்டத்தில் வீரர்களிடத்தில் கடைசி வரை போராடும் மன நிலையை வலியுறுத்தி வெற்றி பெற்றுள்ளேன், இதன் விளைவுதான் 2 டி20 உலகக்கோப்பை வெற்றிகள். மீண்டும் அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு கூறியுள்ளார்.

டேரன் சமி மே.இ.தீவுகள் அணியை 47 டி20 போட்டிகள் வழிநடத்தியுள்ளார். இதில் 27-ல் வெற்றி பெற்றுள்ளது மேற்கிந்திய அணி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in