Last Updated : 03 Nov, 2014 05:29 PM

 

Published : 03 Nov 2014 05:29 PM
Last Updated : 03 Nov 2014 05:29 PM

ஆம்புரோஸ் பவுன்சரை ஆன்டிகுவாவுக்கு அனுப்புவேன்: சச்சின் சுயசரிதையில் சுவாரசிய குறிப்புகள்

சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை நூலான ‘பிளேயிங் இட் மை வே’ நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அந்த நூலில் சச்சின் எழுதியுள்ள சில விவரங்கள் வெளியாகியுள்ளன.

தனது கேப்டன்சி காலத்தில் அடைந்த தோல்விகளினால் கிரிக்கெட் ஆட்டத்தை விட்டே போய் விடலாம் என்று நினைத்ததாக சச்சின் தன் சுயசரிதையில் கூறியுள்ளார்.

"தோல்விகளை கடுமையாக வெறுப்பவன் நான், தொடர்ந்து மோசமாக அணியினர் விளையாடும்போது எனக்கு அதிக பொறுப்பிருப்பதாக உணர்ந்தேன். கவலைக்குரிய விஷயம் என்னவெனில், அணியை வெற்றிப்பாதைக்கு எப்படி அழைத்துச் செல்வது என்பது எனக்குப் புரியவில்லை. என்னால் முடிந்ததை நான் ஏற்கெனவே செய்திருந்தேன்.

நெருக்கமான சில போட்டிகளை நாம் தோற்றது என்னை மிகவும் காயப்படுத்தியது, அச்சமூட்டக்கூடியதாக அந்தத் தோல்விகள் அமைந்தன. தோல்விகளிலிருந்து விடுபட முடியும் என்ற நம்பிக்கையே என்னை விட்டுப் போய் கொண்டிருந்தது. ஒரு சமயத்தில் கிரிக்கெட்டை விட்டே போய் விடலாம் என்று சீரியசாக யோசித்துக் கொண்டிருந்தேன்.” என்றார்.

சச்சின் டெண்டுல்கர் 1997-ஆம் ஆண்டு கேப்டனாக மேற்கிந்திய தீவுகள் சென்றிருந்த போது பெற்ற தோல்விகளே அவரை இந்த முடிவுக்கு வரவைத்தது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளை டிரா செய்த இந்தியா 3-வது டெஸ்ட்டில் ஒரு அரிய வெற்றி வாய்ப்பைப் பெற்றது. இலக்கு 120 ரன்களே. ஆனால் இந்தியா அதிர்ச்சிகரமாக 81 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. லஷ்மண் தவிர ஒருவரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை.

இந்த தோல்வி குறித்து சச்சின் கூறும்போது, “மார்ச் 31, 1997- அந்தத் திங்கட் கிழமை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இருண்ட நாள். என்னுடைய கேப்டன்சி வாழ்வில் மிகவும் மோசமான தினம். முதல் நாள் இரவு பார்படாஸில் உள்ள செயிண்ட் லாரன்ஸ் உணவு விடுதியில் இரவு உணவு எடுத்துக் கொண்டிருந்த போது, வெயிட்டர் ஒருவர் மேற்கிந்திய அணி வெற்றி பெறும் என்று உறுதியாக என்னிடம் கூறினார். கர்ட்லி ஆம்புரோஸ் இந்திய அணியை பவுன்ஸ் செய்து வீழ்த்திவிடுவார் என்று என்னிடம் அவர் கூறினார்.

நான் கூட அதற்கு விளையாட்டாக பதில் கூறினேன், அதாவது முதல் இன்னிங்ஸில் பிராங்க்ளின் ரோஸ் எனக்கு பவுன்சர் வீசினார். அதனை ஸ்டாண்டிற்கு அடித்தேன். எனவே ஆம்புரோஸ் எனக்கு பவுன்சர் வீசினால் அந்தப் பந்தை ஆன்டிகுவாவுக்கே அடிப்பேன் என்று கூறினேன்.

மேலும் அங்கிருந்த ஃபிரிட்ஜைக் காட்டி அதில் ஷாம்பெய்ன் பாட்டில் ஒன்றை வையுங்கள், நாளை இந்தியா வெற்றி பெற்றவுடன் நான் அதனைத் திறப்பேன், கொண்டாடலாம் என்றேன்.

ஆனால் 81 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தோம். அதுபோன்ற மோசமான பேட்டிங்கிற்கு மன்னிப்பே கிடையாது. அது ஒரு கடினமான பிட்ச் என்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் யார் மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. அது என்னுடைய வழியல்ல. இருந்தாலும், இது போன்று தோல்வியடைந்த ஒரு அணியில் நான் இருந்தேன், நான் பொறுப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்திருக்க வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் மிக மோசமான பேட்டிங் வீழ்ச்சியில் நானும் ஒரு பகுதியாக இருந்ததை இப்போது நினைத்தாலும் பதறுகிறது.

நானே அந்த டெஸ்ட் போட்டியில் 4 ரன்களுக்கு அவுட் ஆனேன். பந்தை தொட வேண்டும் என்ற ஆவலில் ஆடப்போக எட்ஜ் எடுத்தது. நான் அந்தப் பந்தை விட்டிருக்க வேண்டும், அல்லது எதிர்தாக்குதல் பேட்டிங் ஆடியிருக்க வேண்டும். இந்தத் தோல்வியால் வெகுவாக உடைந்து போனேன், 2 முழுநாட்கள் எனது அறையின் கதவைத் திறக்காமல் முடங்கிப் போனேன். இன்றும் கூட அந்தத் தோல்வி என் மனத்தை பதைபதைக்கச் செய்கிறது.

5 டெஸ்ட்கள் கொண்ட தொடரை 0-1 என்று இழந்து ஒருநாள் போட்டித் தொடருக்குச் சென்றோம். ஆனால் அதிலும் தோல்வி கண்டோம். அதிலும் 3-வது ஒருநாள் போட்டியில் பெற்ற தோல்வி என்னை மேலும் அச்சுறுத்தியது. செயிண்ட் வின்செண்டில் நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி 10 ஓவர்களில் 47 ரன்கள் தேவை. 6 விக்கெட்டுகள் கையில் இருந்தது. ராகுல் திராவிடும், கங்குலியும் வெற்றிக்கான களத்தை அமைத்துக் கொடுத்தனர்.

ஆனால் நான் எவ்வளவோ பெரிய ஷாட்களுக்குச் செல்ல வேண்டாம், ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவாகவே தேவைப்படுகிறது நிதானமாக ஆடினாலே வெற்றி பெறலாம் என்று வீரர்களுக்கு கூறினேன், ஆனால் பின்கள வீரர்கள் தொடர்ந்து பந்தை மேலே தூக்கி அடித்து வீழ்ந்தனர். தற்கொலைக்குச் சமமான ரன் அவுட்கள் வேறு. வெற்றி பெறும் நிலையிலிருந்து அணி தோல்வியடைந்தது எனக்கு கடும் கோபத்தைக் கிளப்பியது.

ஆட்டம் முடிந்து வீரர்களை அழைத்துக் கூட்டம் கூட்டினேன், அன்று நான் எனது ஓர்மையை இழந்து வீரர்களிடத்தில் சத்தம் போட்டேன். நான் இதயபூர்வமாக பேசினேன், இந்தத் தோல்வியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றேன். எதிரணியினர் சிறந்த முறையில் ஆடி நாம் தோற்றால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் வெற்றி பெறும் நிலையிலிருந்து தோல்வி அடைவது அணியினரிடத்தில் சீரியசான பிரச்சினை இருப்பதாகவே என்னை நினைக்க வைத்தது.

நான் அந்தத் தோல்விக்குப் பிறகு மிகவும் சோர்வடைந்தேன், அன்று மாலை அனில் கும்ப்ளேவும், ஸ்ரீநாத்தும் என் அறைக்கு வந்து என்னைத் தேற்றினர். தோல்விகளுக்கு என்னை நானே குற்றம்காணக்கூடாது என்று என்னிடம் அவர்கள் இருவரும் கூறினர், ஆனாலும் என் மீது தோல்வி விழுந்து அழுத்தவே செய்தது.

என் மனைவி அஞ்சலிதான், எல்லாம் சரியாகி விடும், வரும் மாதங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று ஆறுதல் கூறினார். திரும்பிப் பார்க்கும்போது எனக்கு தோல்விகள் வெறுப்பாகவே உள்ளது” என்று தன் சுயசரிதையில் அந்தத் தொடர் பற்றி எழுதியுள்ளார் சச்சின்.

இந்த சுயசரிதை நூலை அவர் கிரிக்கெட் எழுத்தாளர் போரியா மஜும்தாருடன் இணைந்து எழுதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x