

இரான் மாணவர் ரேஸா பாராஸ்டேஷ் என்பவர் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி போலவே இருப்பதால் இரானில் சாலையில் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள போட்டா போட்டி ஏற்பட்டு வருகிறது.
சில வேளைகளில் போலீஸார் போக்குவரத்திற்கு இவரால் ஏற்படும் தொந்தரவுகளுக்காக இவரை எச்சரிக்கவும் செய்தனர்.
இரான் மேற்கு நகரமான ஹமீதனில் இவரைப் பார்த்தாலே கால்பந்து ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ள குதூகலமாக குவிகின்றனர்.
மெஸ்ஸிக்கும் ரேஸாவுக்கும் ஆச்சரியப்படத் தக்க வகையிலான ஒற்றுமைகள் இருப்பதால் பிரிட்டன் யூரோஸ்போர்ட் ஒரு முறை மெஸ்ஸி குறித்த செய்தியில் இவரது புகைப்படத்தைத் தவறுதலாக பயன்படுத்த நேரிட்டது.
சில மாதங்களுக்கு முன்பாகர் ரேஸாவின் கால்பந்து தீவிரத் தந்தை பார்சிலோனா சீருடையில் நம்பர் 10 என்பதுடன் தன் மகன் படத்தை எடுத்து விளையாட்டுக்கான இணையதளத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மெஸ்ஸி போன்று தான் இருப்பதால் வெளியே போகும்போது கூட ரேசா, பார்சிலோனா சீருடையில் செல்லத் தவறுவதில்லை.
“என்னைத் தற்போது ‘இரானிய மெஸ்ஸி’ என்றே அழைக்கின்றனர், மெஸ்ஸி செய்யும் அனைத்தையும் என்னைச் செய்யச்சொல்லி வலியுறுத்துகின்றனர். சில வேளைகளில் நான் புதிய இடங்களுக்குச் செல்லும் போது மக்கள் என்னைப் பார்த்து அதிர்ச்சியடைவதும் உண்டு, என்னைப்பார்த்து மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பது எனக்கு புதிய ஆற்றலை அளிக்கிறது” என்கிறார்.