

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் இருமுறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி தகுதி சுற்று 2-ல் விளையாட தகுதி பெறும்.
கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி லீக் ஆட்டங்களின் முதற்கட்டத்தில் அதிரடி வெற்றிகளை குவித்தது. ஆனால் பிற்பாதியில் 7 ஆட்டங்களில் 4-ல் தோல்வியை சந்தித்தது.
காயம் குணமடைந்த நிலையில் அணிக்கு திரும்பி உள்ள அதிரடி வீரரான கிறிஸ் லின் கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களில் இரு அரை சதங்கள் அடித்துள்ளார். அதிலும் பெங்களூரு அணிக்கு எதிராக 22 பந்துகளில் 50 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிராக 52 பந்துகளில் 84 ரன்களும் விளாசியிருந்தார்.
விதிவிலக்கான தொடக்கத்தை அளிக்கும் சுனில் நரேன் கடந்த சில ஆட்டங்களில் கைகொடுக்க தவறினார். பெங்களூரு மைதானத் தில் அவர், 15 பந்துகளில் அரை சதம் அடித்து ஏற்கெனவே சாதனை படைத்துள்ளார். இதனால் சுனில் நரேன் மீண்டும் அசத்த வாய்ப்புள்ளது.
காம்பீர் இந்த சீசனில் 454 ரன்கள் குவித்துள்ளார். அதிக ரன் குவித்துள்ளவர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும் என கருதப்படுகிறது. பேட்டிங்கில் 5 அரை சதங்கள் அடித்துள்ள ராபின் உத்தப்பாவும் பலம் சேர்ப்பவராக உள்ளார். இந்த சீசனில் அவர் 386 ரன்கள் சேர்த்துள்ளார்.
பேட்டிங்கில் அவர் சிறப்பாக செயல்பட்டாலும் விக்கெட் கீப்பிங்கில் சில சமயங்களில் சோடை போகிறார். மும்பை அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் நல்ல பார்மில் இருந்த அம்பாட்டி ராயடுவின் கேட்ச்சை உத்தப்பா தவறவிட்டார். இதனால் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
மணீஷ் பாண்டே இந்த சீசனில் 396 ரன்கள் சேர்த்துள்ள போதும் ஒரு சில ஆட்டங்களிலேயே அவர் அதிரடியாக விளையாடினார். அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய சில ஆட்டங்களில் மணீஷ் பாண்டே பந்துகளுக்கு நிகராக ரன் சேர்த்து கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தினார்.
இதனால் கொல்கத்தா அணி சில சமயங்களில் தோல்விகளை சந்திக்க நேரிட்டது. தற்போது முக்கியமான கட்டத்தில் கொல்கத்தா அணி உள்ள தால் மணீஷ் பாண்டே பொறுப்புடன் செயல்படக்கூடும். அதிரடி வீரரான யூசுப் பதானுக்கு இந்த சீசன் சிறப் பானதாக அமையவில்லை.
இந்த சீசனில் அவர் 14 ஆட்டங்களில் ஒரு அரைசதத்துடன் வெறும் 143 ரன்களே சேர்த்துள்ளார். இதனால் ரன்கள் சேர்க்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார் யூசுப் பதான். பந்து வீச்சில் 17 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள கிறிஸ் வோக்ஸ், 14 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள உமேஷ் யாதவ் ஆகியோர் எதிரணிக்கு நெருக்கடி தரக்கூடும்.
நடப்பு சாம்பியனான டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதரா பாத் அணி 14 லீக் ஆட்டங்களில் விளையாடி 17 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்திருந்தது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியிருந்தது.
இந்த சீசனில் 604 ரன்கள் குவித்துள்ள வார்னர், 468 ரன்கள் சேர்த்துள்ள ஷிகர் தவண் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும் என கருதப்படுகிறது.
கடந்த சீசனில் அணி பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த வார்னர், இந்த சீசனிலும் அணியை திறம்பட வழிநடத்தி வருகிறார். பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக இன்றைய ஆட்டத்தில் முகமது நபி நீக்கப்பட்டு வில்லியம்சன் களமிறக்கப்படக்கூடும்.
ஹென்ரிக்ஸ், விஜய் சங்கர் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். கடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக களமிறங்காத யுவராஜ் சிங் இன்று களமிறங்கக்கூடும். யுவராஜ் சிங் இந்த சீசனில் 11 ஆட்டத்தில் 2 அரை சதங்களுடன் 243 ரன்கள் சேர்த்துள் ளார்.
பேட்டிங்கை விடவும் அணியின் பந்து வீச்சு அபார பலத்துடன் உள்ளது. 13 ஆட்டத்தில் 25 விக்கெட்கள் வேட்டையாடி உள்ள புவனேஷ்வர் குமார் வெற்றி தேடிக்கொடுப்பவராக திகழ்கிறார். அவருக்கு உறுதுணையாக இளம் வீரர்களான முகமது சிராஜ், சித்தார்த் கவுல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முகமது சிராஜ் 4 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். சித்தார்த் கவுல் இந்த சீசனில் 16 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். சுழற்பந்து வீச்சில் 17 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள ரஷித் கானும் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தகுதி சுற்று 2-ல் விளையாட தகுதி பெறும். அதாவது எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி 19-ம் தேதி நடைபெறும் தகுதி சுற்று 2-ல், முதல் தகுதி சுற்றில் தோல்வியடைந்த அணியுடன் பலப்பரீட்சை நடத்தும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குள் 2-வது அணியாக நுழையும்.
அணிகள் விவரம்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், ஷெல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லின், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:
டேவிட் வார்னர் (கேப்டன்), தன்மே அகர்வால், வில்லியம்சன், யுவராஜ் சிங், ரிக்கி புயி, பிபுல் சர்மா, பென் கட்டிங், ஷிகர் தவண், திவேதி, மொயிசஸ் ஹென்ரிக்ஸ், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், சித்தார்த் கவுல், புவனேஷ்வர் குமார், பென் லாக்லின், அபிமன்யு மிதுன், முகமது நபி, முகமது சிராஜ், முஸ்டாபிஜூர் ரஹ்மான், ஆஷிஸ் நெஹ்ரா, நமன் ஓஜா, ரஷித் கான், விஜய் சங்கர், பரிந்தர் ஷரன், பிரவீண் தாம்பே.
நேரம்: இரவு 8, இடம்: பெங்களூரு
நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்