

ஒலிம்பிக்கில் தனது பேரன் வெண்கலப் பதக்கம் வென்றதால் அதீத மகிழ்ச்சி அடைந்த பாட்டி உற்சாக மிகுதியில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக மரணமடைந்தார்.
தாய்லாந்தைச் சேர்ந்தவர் 20 வயதான சின்பெட் குரூய்தாங். இவர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 56 கிலோ எடை பிரிவு பளு தூக்குதலில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதனால் பாங்காக்கில் உள்ள அவரது வீட்டினர் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக சின்பெட்டின் 84 வயதான பாட்டி சுபின் கோங்காபுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. மகிழ்ச்சி கொண்டாட்டத்தின்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவரிடம் அழைத்து சென்றனர். ஆனால் பாட்டி ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கொசோவாவுக்கு முதல் தங்கம்
ஒலிம்பிக் ஜூடோவில் ஆடவருக்கான 66 கிலோ எடை பிரிவு இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் ஃபெபியோ பேசிலி தென்கொரியாவின் அன் பவுலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். மகளிர் பிரிவில் கொசோவா நாட்டை சேர்ந்த கெல்மெண்டி 55 கிலோ எடை பிரிவில் இத்தாலியின் ஒடிடி கல்பிடாவை வீழ்த்தி தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் கொசோவா நாட்டு வீரர் முதல் பதக்கத்தை வெல்வது இதுவே முதன் முறை.
வில்வித்தையில் 8-வது தங்கம்
ஒலிம்பிக் வில்வித்தை குழு மகளிர் பிரிவில் தென்கொரியா 8-வது முறையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. இறுதிப்போட்டியில் ரஷ்யா - தென் கொரிய அணிகள் மோதின. இதில் 5-1 என்ற கணக்கில் தென் கொரிய அணி தங்கம் வென்றது. ரஷ்யா வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது. இந்த பிரிவில் காலிறுதி வரை முன்னேறிய இந்திய அணி ரஷ்ய அணியிடம் 23 - 25 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது குறிபிப்டத்தக்கது.
இந்திய வீரர்களின் இன்றைய களம்
துப்பாக்கி சுடுதல்
மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் தகுதி சுற்று ஹீனா சித்து
நேரம்: மாலை 5.30
ஆடவர் வில்வித்தை
ஆடவர் தனிநபர் பிரிவு
அட்டானு தாஸ்
நேரம்: மாலை 5.30
ஆடவர் ஹாக்கி
இந்தியா - அர்ஜென்டினா
நேரம்: இரவு 7.30
ஆடவர் குத்துச்சண்டை
75 கிலோ எடை பிரிவு
விகாஷ் கிருஷ்ணன்
நேரம்: இரவு 2.30