

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, லியாண்டர் பயஸ் ஜோடிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி 4-6, 6-3, 12-10 என்ற செட் கணக்கில் 3-ம் நிலை ஜோடியான பிரான்சின் கிறிஸ்டினா மெடேன்னோவிக், ஹியூஸ் ஹர்பர்ட் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரை இறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-3, 3-6, 10-7 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் ஹலவக்கோவா, வஸ்செலின் ஜோடியை வென்றது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சானியா ஜோடி பட்டம் வெல்வதற்காக பயஸ் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 3-வது சுற்றுடன் வெளியேறி நிலையில் தற்போது கலப்பு இரட்டையர் பிரிவில் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க உள்ளனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மை எதிர்த்து விளையாடினார்.
மற்றொரு அரையிறுதியில் 2-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவுட்ன் பலப்பரீட்சை நடத்தினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் 58-வது இடத்தில் உள்ள நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸை சந்தித்தார்.
இரண்டாவது அரையிறுதியில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, 21-ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை எதிர்கொண்டார்.
மகளிர் இரட்டையர் பிரிவி அரையிறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 7-வது இடத்தில் ரஷ்யாவின் மகரோவா, எலினா வெஸ்னினா ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் செக்குடியரசின் கிரெஜிகோவா, சைனிகோவா ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.