பரபரப்பான ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி

பரபரப்பான ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி
Updated on
2 min read

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத்தீவுகள் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பானதாக இருந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மேற்கிந்தியத்தீவுகள் 49.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்து வென்றது.

அதிரடியாக விளையாடிய டேரன் சமி, மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். அவர் 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் அடங்கும்.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இப்போது 2-வது ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் கான்பூரில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் முதலில் பீல்டிங் செய்யத் தீர்மானித்தது.

இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷீகர் தவண் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். இருவருமே நிதானமாக விளையாடினர். 4.5 ஓவர்களில் ஸ்கோர் 21 ஆக இருந்தபோது 12 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து கோலி களமிறங்கினார். ஸ்கோர் 69 ஆக உயர்ந்தபோது சிறப்பாக விளையாடி வந்த தவண் 35 ரன்களுக்கு (37 பந்துகள்) விக்கெட்டை பறிகொடுத்தார்.அடுத்து களமிறங்கிய யுவராஜ் சிங் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக விளையாடினார். இதனால் ரன் வேகம் குறைந்தது. சரியாக இருபது ஓவர்களில் இந்தியா 100 ரன்களை எட்டியது. இதனிடையே 59 பந்துகளில் அரைசதம் கடந்தார் கோலி. ஸ்கோர் 138 இருந்தபோது இந்தியா 3-வது விக்கெட்டை இழந்தது. யுவராஜ் சிங் 49 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னாவும் அதிக நேரம் நீடிக்கவில்லை. அவர் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் தோனி களமிறங்கினார்.

கோலி 99-ல் அவுட்

சிறப்பாக விளையாடிய விராட் கோலி 99 ரன்களை எட்டினார். இதனால் அவர் சதமடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ராம்பால் வீசிய பந்தை தவறாக கணித்து விளையாடிய கோலி, ஹோல்டரின் கையில் கேட்ச் கொடுத்து அதிருப்தியுடன் வெளியேறினார்.

அப்போது இந்திய அணி 40 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது. பின்வரிசையில் ஜடஜாவின் ஆட்டமும் மோசமாக இருந்தது. அவர் 20 பந்துகளில் 10 ரன்களே எடுத்தார். ஆனால் மறுமுனையில் தோனி கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். அவர் 40 பந்துகளில் 51 ரன்களை எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் 4 சிக்ஸர், 3 பவுண்டரி அடங்கும். அஸ்வின் தன் பங்குக்கு 10 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார்.

தோனியின் கடைசி கட்ட ரன் குவிப்பால் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. தோனி, புவனேஸ்வர் குமார் ஆகியோர் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

பின்னர் 289 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆட்டத்தை தொடங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணியில் தொடக்கவீரர் சார்லஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்கவீரர் பாவெல் 59 ரன்கள் எடுத்தார். பிராவோ 50 ரன்கள் குவித்தார்.

கடைசி கட்டத்தில் சிம்மன்ஸ், சமி ஆகியோர் சிறப்பாக விளையாடி மேற்கிந்தியத்தீவுகளை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். சிம்மன்ஸ் 74 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இந்திய பந்து வீச்சாளர்களுக்கு பெரும் சோதனையாக அமைந்த சமி 45 பந்துகளில் 63 ரன்களை விளாசி தங்கள் அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in