

ஓவலில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 308 ரன்கள் வெற்றி இலக்கை 40.1 ஓவர்களில் எட்டி இங்கிலாந்து அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது.
இது இங்கிலாந்தின் 2-வது வெற்றிகரமான அதிகபட்ச ரன் விரட்டலாகும்.
முதலில் பேட் செய்த இலங்கை மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் 42 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்துக்கு டக்வொர்த் முறைப்படி 42 ஓவர்களில் 308 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராய் தன் வாழ்நாளின் சிறந்த அதிரடி இன்னிங்ஸை ஆடி 118 பந்துகளில் 13 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 162 ரன்கள் விளாச 40.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது.
ஜேசன் ராய் எடுத்த 162 ரன்கள் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து பேட்ஸ்மென் ஒருவர் எடுக்கும் 2-வது அதிகபட்ச ரன்களாகும். மிகவும் தெள்ளத்தெளிவான ஹிட்டிங்கைச் செய்தார் ஜேசன் ராய். இதனுடன் துல்லியமான ஓட்டம் இதன் மூலம் ஒரு தனிச்சிறப்பான அதிர்ச்சியூட்டும் அதிரடி இன்னிங்ஸை ஆடினார் ஜேசன் ராய்.
இரண்டரை மணி நேர மழையினால் இலங்கையின் இன்னிங்ஸ் பாதிக்கப்பட்டது என்றாலும் ஜேசன் ராயின் அதிரடிக்கு முன் எந்த ஒரு பவுலிங்கும் நேற்று சாயம் வெளுத்திருக்கவே செய்யும்.
ராயின் முதல் சதம் 74 பந்துகளில் வந்தது, 109 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார். 23 ஆண்டுகளுக்கு முன்பாக ராபின் ஸ்மித் எடுத்த 167 ரன்களை முறியடிப்பார் ராய் என்ற நிலையில் 162 ரன்களில் நுவான் பிரதீப்பின் வேகம் குறைந்த பந்தில் பவுல்டு ஆனார். ஆனால் அப்போது இங்கிலாந்து வெற்றிக்கு 27 ரன்களே தேவையாக இருந்தது.
பீல்டிங்கில் அலெக்ஸ் ஹேல்ஸ் முதுகு காயம் அடைய, மொயீன் அலி தொடக்க வீரராக ராயுடன் இறங்கினார். ஆனால் 2 ரன்களில் மொயீன் அலி, நுவான் பிரதீப்பிடம் அவுட் ஆனார்.
ஜோ ரூட்டுடன் இணைந்தார் ஜேசன் ராய், இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக சுமார் 18 ஓவர்களில் 149 ரன்களை சேர்த்தனர். ஜோ ரூட் தன் பங்கிற்கு 54 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து குணதிலகாவிடம் ஆட்டமிழந்தார். இவர் இதற்கு முன்னர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயான் மோர்கன் 27 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து சுரங்க லக்மல் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை அடித்தார், ஆனால் அங்கு தனுஷ்கா குணதிலக மிக அருமையாக டைவ் அடித்து ஒரு கையில் கேட்ச் பிடித்தார், மிகவும் அசாதாரணமான கேட்ச். ஆனால் வழக்கம் போல் லாஃப்டட் சிக்ஸ் ஒன்றை அடித்தார் இயன் மோர்கன்.
ஜேசன் ராய் ஒரு முனையில் அசைக்க முடியா நம்பிக்கையுடன் சென்று கொண்டிருந்தார், வேகமான கால்கள், சேவாக் போலவே கை, கண் ஒருங்கிணைப்பு அபாரமாக இருந்தது. 3 சிக்சர்களுமே அவரது ஆதிக்கத்தை அறிவுறுத்திய சிக்சர்கள். ஜோ ரூட் தனது தோல்விகளை மனதில் கொண்டு கிரீஸில் நின்று கவனித்து ஆடினார், அவசரம் காட்டாத இன்னிங்சிலும் கூட 37 பந்துகளில் அவர் அரைசதம் எடுத்தார். பிட்ச் நம்பகமான பிட்ச் என்பதில் ஐயமில்லை.
முன்னதாக இலங்கை அணி இங்கிலாந்தினால் பேட் செய்ய அழைக்கப்பட்ட போது, குணதிலக (62), மெண்டிஸ் (77) ஆகியோர் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 18 ஓவர்களில் 128 ரன்களைச் சேர்த்தனர். மழைக்குப் பிறகு ரஷீத் தனது கூக்ளியை நன்றாகப் பயன்படுத்த மெண்டிஸ், குணதிலக ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
சந்திமால், மேத்யூஸ் இணைந்து 13 ஓவர்களில் 87 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர், சந்திமால் 51 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்து வில்லேயிடம் பவுல்டு ஆனார். மேத்யூஸ் 54 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். அதிரடி மன்னன் சீகுகே பிரசன்னா 9 ரன்களில் ஆட்டமிழக்க ஷனகா 19 ரன்கள் எடுக்க இலங்கை 42 ஓவர்களில் 305 ரன்கள் எடுத்தது.
ஆட்ட நாயகனாக ஜேசன் ராய் தேர்வு செய்யப்பட்டார்.