

இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து தொடக்க வீரரான அலெக்ஸ் ஹெல்ஸ் விலகி உள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக ஜானி பேர் ஸ்டோவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து குறுகிய வடிவிலான தொடர்களில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி தொடரை இழந்துள்ள நிலையில் இன்று கடைசி ஆட்டத்தில் மோத உள்ளது.
இதற்கிடையே கட்டாக்கில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தின் போது இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹெல்ஸூக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. காயத்தின் தன்மை தீவிரமாக உள்ளதால் கடைசி ஒருநாள் போட்டியில் இருந்தும் அதை தொடர்ந்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் இருந்தும் அலெக்ஸ் ஹெல்ஸ் விலகி உள்ளார்.
இதையடுத்து அவருக்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டி 20 தொடரின் முதல் ஆட்டம் வரும் 26-ம் தேதி கான்பூரில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.