

இந்தியா ஏ மற்றும் வங்கதேச அணிகள் இடையே ஐதராபாத்தில் நடந்த 2 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், பாஞ்சால், விஜய் சங்கர் ஆகியோர் சதம் விளாசி வங்கதேச அணியை திணறடித்தனர்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்கு முன்னதாக இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணி ஆடியது. இந்தப் பயிற்சி ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸில் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை மட்டுமே எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி, முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் 1 விக்கெட் இழப்புக்கு 91 ரன்களை எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களுடனும், பாஞ்சால் 40 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நேற்று காலை ஆட்டத்தைத் தொடர்ந்த பாஞ்சால் - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி, வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சவாலாக விளங்கியது. ஒரு புறம் பாஞ்சால் நிதானமாக ஆட, மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் பவுண்டரிகளாக விளாசினார். 92 பந்துகளில் 12 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 100 ரன்களை அடித்த ஸ்ரேயாஸ் ஐயர், மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வழிவிடுவதற்காக அவுட் ஆகாமலேயே பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து 148 பந்துகளில் 103 ரன்களைக் குவித்த பாஞ்சாலும் அவுட் ஆகாமலேயே மற்ற வீரர்கள் பேட்டிங் செய்ய வசதியாக ஆட்டத்தை முடித்துக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான விஜய் சங்கரும் (103 ரன்கள்) சதம் விளாச இந்தியா ஏ அணி 8 விக்கெட் இழப்புக்கு 461 ரன்களைக் குவித்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இது வங்கதேச அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 237 ரன்கள் அதிகமாகும். வங்கதேச அணியில் சுபாஷிஸ் ராய், தாய்ஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸை ஆடியது. அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 73 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டம் டிராவில் நிறைவடைந்தது.