Last Updated : 05 Nov, 2014 10:05 AM

 

Published : 05 Nov 2014 10:05 AM
Last Updated : 05 Nov 2014 10:05 AM

மத்திய அரசின் சாட்டையடி; மாற்றத்துக்கான அறிகுறி!

எப்போது அழைத்தாலும் நாட்டுக்காக விளையாடத் தயாராக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இனி அரசின் நிதி உதவி வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய விளையாட்டு அமைச்சகம்.

இந்திய டென்னிஸ் வீரர்கள் பயஸ், போபண்ணா, சோம்தேவ் ஆகியோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட மறுத்ததன் எதிரொலியாக வெளியிடப் பட்டுள்ள இந்த அறிவிப்பு, விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அமைச்சகத்தின் முடிவு மிகச் சரியானது என்பதுதான் நிதர்சனம்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான விளையாட்டு வீரர்களுக்கு ஆரம்ப காலத்தில் அரசின் நிதியுதவி தேவைப்படுகிறது. அந்த நிதியுதவியோடுதான் அடுத்த கட்டத்துக்கே முன்னேறுகிறார்கள். ஆனால் முன்னணி வீரர்களாக உருவெடுத்த பிறகு அவர்களுக்கு பெரும் புகழும் பணமும் குவிந்துவிடுகிறது. அதன்பிறகு தங்களின் வளர்சிக்கு உறுதுணையாக இருந்த அரசையும், நாட்டு மக்களையும், நாட்டுப்பற்றையும் அறவே மறந்துவிடுகிறார்கள்.

வீரர்களிடம் கெஞ்சும் அரசு

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர்களான லியாண்டர் பயஸ், ரோஹன் போபண்ணா, சோம்தேவ் ஆகியோர் தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மறுத்ததே அதற்கு நல்ல உதாரணம். தரவரிசையில் முன்னேற்றம் காண்பதற்காக ஏடிபி போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக மேற்கண்ட 3 வீரர்களும் கூறினார்கள். டென்னிஸ் வீரர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள தனிநபர் விளையாட்டுகளில் இருக்கும் பெரும்பாலானவர்களின் பதிலும் இதுதான்.

ஏனெனில் இவர்கள் முன்னணி வீரர்களாக அடையாளம் காணப்படும்போது இவர்களுக்கு ஏராளமான ஸ்பான்சர்கள் கிடைக்கின்றன. விளம்பர வருவாய் கொழிக்கிறது. அப்போது அரசின் நிதியுதவி இனிமேல் தங்களுக்கு தேவையில்லை என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். அதனால் மிக எளிதாக அரசின் வேண்டுகோளை நிராகரித்துவிடுகிறார்கள். வீரர்களின் வளர்ச்சிக்காக கொட்டிக்கொடுக்கும் அரசு, பின்னர் அவர்களிடம் கெஞ்ச வேண்டியிருக்கிறது.

அரசை வஞ்சிப்பது சரியா?

ஒவ்வொரு வீரருக்குமே தனிப்பட்ட விளையாட்டு வாழ்க்கை என்பது மிக முக்கியமானதுதான். தரவரிசையில் முன்னேற்றம் காண்பதும், கிராண்ட்ஸ்லாம் போன்ற போட்டிகளில் ஆடுவதும் முக்கியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் நாட்டுக்காக அறவே விளையாடவே முடியாது என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?

வெளிநாடுகளை எடுத்துக்கொண்டால் பெரும்பாலான நாடுகளில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும், அவற்றை பணம் கொடுத்தே பெற முடியும். அங்கு தனிநபர் விளையாட்டுகளில் இருப்பவர்கள் தங்களின் ஆரம்பகாலத்தில் சொந்த பணத்தில்தான் பயிற்சி முதல் உபகரணங்கள் வரை பெறுகிறார்கள். அங்குள்ள முன்னணி வீரர்கள் சில போட்டிகளில் ஆடுவதில்லை என்றாலும், தங்களால் முடிந்த அளவுக்கு நாட்டுக்காக ஆட முயற்சிக்கிறார்கள்.

ரோஜர் ஃபெடரரும், நடாலும் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்தாலும்கூட முடிந்தவரை தாய் நாட்டுக்காக ஆடுவதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்களோ எல்லா உதவியையும் அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டு நாட்டுக்காக ஆட முடியாது எனக்கூறி அரசையே வஞ்சிப்பது சரியா?

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை

நாட்டுக்காக மட்டும்தான் விளையாட வேண்டும். உங்களின் தனிப்பட்ட விளையாட்டு வாழ்க்கையில் கவனம் செலுத்தக்கூடாது என மத்திய அரசு கூறவில்லையே? ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் போட்டி போன்ற பெரிய போட்டிகளில்தானே நாட்டுக்காக பங்கேற்குமாறு கேட்கிறது. மேற்கண்ட எந்த போட்டிகளை எடுத்துக்கொண்டாலும், அவை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடைபெறுகிறது. டென்னிஸ் போன்ற தனிநபர் விளையாட்டுகளைச் சேர்ந்தவர்கள் தாங்கள் விளையாடுகிற காலம் முழுவதும் தாங்கள் விரும்பிய போட்டிகளில்தான் பங்கேற்கிறார்கள். அப்படியிருக்கையில் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் இந்தியாவுக்காக பங்கேற்பதால் இவர்கள் எந்த வகையில் குறைந்துவிட போகிறார்கள்?

ஒருவேளை பயஸ், போபண்ணா, சோம்தேவ் ஆகியோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றிருந்தால் கூடுதலாக இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்திருக்கலாம். அப்படி கிடைத்திருந்தால் பதக்கப் பட்டியலில் 8-வது இடத்தைப் பிடித்த இந்தியா, 6-வது இடத்தைப் பிடித்திருக்கலாம்.

கவுரவமா, நாட்டுப்பற்றா?

இந்தியாவில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுமே நாட்டுக்கே முன்னுரிமை என்கிறார்கள். ஆனால் நாட்டுக்காக விளையாட மட்டும் தயங்குகிறார்கள். எனது நாட்டுப் பற்று குறித்து யாரும் கேள்வியெழுப்ப முடியாது என லியாண்டர் பயஸ் இப்போதும் கூறுகிறார். ஆனால் நாட்டுப் பற்றைவிட தங்களின் கவுரவமே முக்கியம் என நினைத்ததால்தானே கடந்த ஒலிம்பிக்கில் பயஸும், பூபதியும் இணைந்து விளையாட மறுத்தனர். ஒலிம்பிக்கில் போபண்ணா தன்னுடன் இணைந்து விளையாட வேண்டும். இல்லையெனில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா தன்னுடன் இணைந்து விளையாட வேண்டும் என பயஸ் ஏன் பிடிவாதம் பிடித்தார்? இவர்களின் வறட்டு கவுரவத்துக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய விலை என்ன தெரியுமா? கடந்த ஒலிம்பிக்கில் டென்னிஸ் மூலம் இந்தியாவுக்கு கிடைக்கவிருந்த இரண்டு பதக்கங்களை இழந்ததுதான்.

மாற்றம் தென்படுகிறது

காலம்காலமாக இதுபோன்ற பிரச்சினைகள் நடந்து வந்தாலும், சம்பந்தப்பட்ட விளையாட்டு சங்கங்கள் தொடர்ந்து வேடிக்கை பார்த்தே வந்திருக்கின்றன. வீரர்கள் மற்றும் சங்கங்களின் அடாவடிகளையெல்லாம் பல ஆண்டுகளாக பொறுத்துக்கொண்ட மத்திய விளையாட்டு அமைச்சகம், இனிமேல் எப்போது அழைத்தாலும் நாட்டுக்காக விளையாடத் தயாராக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே அரசின் நிதி உதவி வழங்கப்படும் என்று கூறியிருப்பது வரவேற்புக்குரியதுதான்.

எனினும், இதிலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும். அதாவது, இதற்கு முன்பு அரசிடமிருந்து ஒருமுறை நிதியுதவி பெற்றிருந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட வீரர் ஓய்வு பெறும்வரை தேவைப்படும்பட்சத்தில் நாட்டுக்காக ஆட வேண்டும் என்ற கடுமையான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அதே சமயம், காயம், முக்கியப் போட்டி என தவிர்க்க முடியாத சூழல்கள் ஏற்பட்டால், நாட்டுக்காக விளையாடுவதிலிருந்து வீரர்களுக்கு விலக்கு அளிக்கலாம். இதுதவிர நாட்டுக்காக விளையாட மறுக்கும் வீரர்களின் பெயரை விருதுகளுக்கு பரிசீலிக்கக்கூடாது. அப்படியொரு நிலை ஏற்பட்டால்தான் முன்னணி வீரர்கள் இந்தியாவுக்காக ஆட மறுப்பதை தடுக்க முடியும்.

கடந்த காலங்களில் நிதியுதவியை அளித்துவிட்டு, விளையாட்டுக்காக இவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என அறிக்கைகள் மூலம் விளம்பரம் தேடிக்கொண்ட மத்திய அரசு, இப்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. இந்திய விளையாட்டுத் துறையில் மா(ஏ)ற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி தென்பட ஆரம்பித்திருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x