

பாராலிம்பிக் விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை தீபா மாலிக்குக்கு ஹரியாணா முதல்வர் மனோகர் லால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் தீபா மாலிக் 4.61 மீட்டர் தூரம் குண்டு எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.
இதுகுறித்து ஹரியாணா முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பாராலிம்பிக்கில் பதக்கம் பெற்று வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய தீபா மாலிக்குக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஹரியாணாவின் மகளாக, மாநிலத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார் தீபா.
சாக்ஷி மாலிக், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் முதல் பதக்கத்தை வாங்கிக் கொடுத்துப் பெருமைப்படுத்தினார். தீபா மாலிக், பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஏற்படுத்தியுள்ளார். நம்முடைய மகள்கள் கவுரவத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களால் நாங்கள் பெருமை கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவின் புதிய விளையாட்டுக் கொள்கையின்படி, மாநில அரசு பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்ற தீபாவுக்கு ரூ. 4 கோடியை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.