

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரான ஜோகோவிச்சை வீழ்த்தி, சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை எதிர்த்து விளையாடினார்.
வாவ்ரிங்கா சாம்பியன்
இதில் 31 வயதான வாவ்ரிங்கா முதல் செட்டை 6-7 என இழந்தார். எனினும் அடுத்த 3 செட்களையும் 6-4, 7-5, 6-3 என கைப்பற்றி வாகை சூடினார். இந்த ஆட்டம் சமார் 4 மணி நேரம் நடைபெற்றது. அமெரிக்க ஓபனில் வாவ்ரிங்கா பட்டம் வெல்வது இதுவே முதன்முறை.
மேலும் வாவ்ரிங்கா கைப்பற்றிய 3-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். 2014-ல் ஆஸ்திரேலிய ஓபன், 2015-ல் பிரெஞ்சு ஓபன் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். அமெரிக்க ஓபன் கோப்பையை வென்ற வாவ்ரிங்காவுக்கு ரூ.23.40 கோடி பரிசு வழங்கப்பட்டது.
அமெரிக்க ஓபன் வரலாற்றில் 46 வருடங்களுக்கு பிறகு அதிக வயதில் பட்டம் வென்றவர் என்ற பெருமையையும் வாவ்ரிங்கா பெற்றுள்ளார். கடைசியாக 1970-ல் 35 வயதான கென் ரோஸ்வால் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார். அதன்பின்னர் 2002-ல் பீட்சாம்பிராஸ் 30 வயதில் பட்டம் வென்றிருந்தார்.
இந்தப் போட்டியில் கால் விரல் காயத்துடனேயே ஜோகோவிச் களமிறங்கினார். நான்காவது செட் ஆட்டத்தின்போது ஜோகோவிச் கால் விரலில் இருமுறை ரத்தம் வடிந்தது. உடனடி சிகிச்சைக்கு பின்னர் அவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
ஆச்சர்யம்
வெற்றி குறித்து வாவ்ரிங்கா கூறும்போது, “ஜோகோவிச் நீங்கள் சிறந்த சாம்பியன், மிகப்பெரிய மனிதர். இந்த இடத்தில் உங்களால் தான் நான் இன்று நிற்கிறேன். நீங்கள் செய்த எல்லாவற்றுக்கும் நான், உங்களை வாழ்த்த விரும்புகிறேன்.
அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றது ஆச்சர்யமாக இருக்கிறது. நான் இங்கு வரும் போது வெற்றிக்கான இலக்கு இல்லாமல் தான் வந்தேன். ஆனால் விளையாட ஆரம்பித்ததும் வெற்றிக்காக முயற்சி செய்தேன். எனது இலக்கு சிறந்த ஆட்டத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான்’’ என்றார்.
தகுதியானவர்
29 வயதான ஜோகோவிச், அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்திப்பது இது 4-வது முறையாகும். வாவ்ரிங்கா குறித்து அவர் கூறும்போது,“இந்த வெற்றிக்கு வாவ்ரிங்கா தகுதியானவர். தீர்க்கமான தருணங்களிலும் தைரியமாக விளையாடக் கூடியவர். மனதளவிலும் வாவ்ரிங்கா சிறந்த வீரராக திகழ்கிறார்’’ என்றார்.