எங்களுக்குத் தெரிந்த ஷிகர் தவண் இதுதான்: அதிரடிக்கு டேவிட் வார்னர் புகழாரம்

எங்களுக்குத் தெரிந்த ஷிகர் தவண் இதுதான்: அதிரடிக்கு டேவிட் வார்னர் புகழாரம்

Published on

மொஹாலியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை நொறுக்கியது. இதில் ஷிகர் தவண், வார்னர் இணைந்து 10 ஓவர்களில் 107 ரன்களை விளாசினர்.

முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்களை புரட்டி எடுத்தது. வார்னர் 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 51 ரன்களையும், ஷிகர் தவண் 48 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 77 ரன்களையும் விளாச கடைசியில் கேன் வில்லியம்சன் 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 54 ரன்களை எடுக்க, யுவராஜ் சிங் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல் மட்டுமே சிக்கனமாக வீசி 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சன் ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது.

வார்னர் ஆட்டமிழந்த பிறகு பவுண்டரிகளே வராமல் வெறும் சிங்கிள்களாகவே இரண்டுக்கும் மேற்பட்ட ஓவர்களில் வந்தது, இந்தக் கட்டத்தை பஞ்சாப் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இசாந்த்சர்மா, அனுரீத் ஆகியோர் மோசமாக வீச வில்லியம்ஸ் பொளந்து கட்டினார். அக்சர் படேல், மோகித் சர்மா ஆகியோரும் வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணியில் 50 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் ஷான் மார்ஷ் 84 ரன்களை விளாசினாலும் ஆட்டத்தின் எந்த நிலையிலும் பஞ்சாப் வெற்றி வாய்ப்புக்கான சாத்திய நிலையிலேயே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேக்ஸ்வெல் கவுல் பந்தில் ஆட்டமிழந்து ஸ்கோரர்களை தொந்தரவு செய்யவில்லை. புவனேஷ் மீண்டும் அபாரமாக வீசி 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், நெஹ்ரா, கவுல் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட ஆப்கான் ஸ்பின்னர் ரஷித் கான் ஹை ஸ்கோரிங் மேட்சில், 4 ஓவர்கள் வீசி 16 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றி அபாரமாக மீண்டுமொருமுறை வீசி அசத்தினார். பஞ்சாப் கடைசியில் 181 ரன்களையே எடுக்க முடிந்தது.

இந்நிலையில் டேவிட் வார்னர் கூறும்போது, “நானும் ஷிகர் தாணும் அதிரடி மனநிலையில் களமிறங்கினோம். பிட்ச் அருமையாக அமைந்தது. அவர்கள் அணியில் மார்ஷ் அபாரமாக ஆடினார். விளக்கொளியில் இந்த மைதானம் கொஞ்சம் கடினமாக தெரிகிறது.

ஷிகர் தவண் தன்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆட விரும்பினார், இந்த மாதிரியான ஆக்ரோஷ ஷிகர் தவணைத்தான் நாங்கள் அறிவோம். கேன் வில்லியம்சன் பற்றிக் கூற வேண்டியதில்லை, அவர் ஒரு அற்புதமான வீரர். அதுவும் அவர் சுதந்திரமாக, பார்க்க அழகாக ஆடுவது மகிழ்ச்சியளிக்கிறது, அணிக்கு உத்வேகம் அளிக்கிறது. மார்ஷுக்கும் எனது பாராட்டுக்கள்” என்றார்.

ஆட்ட நாயகன் ரஷீத் கான் கூறும்போது, “முரளிதரன் தன் அனுபவத்தின் மூலம் எனக்கு பெரிதும் உதவி வருகிறார். கேப்டன், பயிற்சியாளர் ஆகியோரிடமிருந்துவரும் உற்சாகம் என்னை வழிநடத்துகிறது. இந்த ஆட்ட நாயகன் விருதை என் குடும்பத்திற்கும் என் சகோதரர் ஜலீலுக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in