

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச சாதனை ஹாக்கி அணி வென்ற 8 தங்கப் பதக்கங்கள்தான். 1928 - 1956-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய ஹாக்கி அணி விளையாடிய ஒலிம்பிக் போட்டியின் 24 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டிகளில் 178 கோல்களை அடித்தது இந்திய அணி. அதேநேரம், எதிரணிகளிடமிருந்து இந்தியா பெற்ற கோல்கள் வெறும் 7 மட்டுமே. இந்தக் காலத்தில் தொடர்ச்சியாக ஆறு தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றது. இந்த புகழ் எல்லாம் 1980-ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிக்கு தங்கம் கைகூடாமல் போனது.
1984-ல் நடைபெற்ற லாஸ்ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் 5-வது இடத்தைதான் பிடிக்க முடிந்தது. அப்போதிருந்தே வீழ்ச்சிதான். கடந்த 1992, 2000, 2004-ம் ஆண்டுகளில் 7-வது இடம். 1988-ல் 6-வது இடம், 1996-ம் ஆண்டில் 8-வது இடம். 2008-ம் ஆண்டு, 80 ஆண்டு கால இந்திய ஹாக்கி வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறவே இல்லை. 2012-ம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் கடைசி இடம். தொடர்ச்சியாக சந்தித்த தோல்விகள் ஏராளம்.
நீண்ட காலத்துக்கு பிறகு கடந்த 2014-ம் ஆண்டு இன்ஜியான் ஆசியப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது. அத்துடன் ஒலிம்பிக் போட்டிக்கு முதல் அணியாக நேரடியாகவும் தகுதி பெற்றது. சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற சாம்பியன் டிராபி ஹாக்கியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது உலகத்தை சற்று திரும்பி பார்க்கவைத்துள்ளது. இந்த வெற்றியால் இந்திய அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இந்திய அணியின் நடப்பு வெற்றிகளின் பின்னணிக் காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுபவர் பயிற்சியாளர் ரோலன்ட் ஒல்ட்மன்ஸ். நெதர்லாந்தை சேர்ந்த இவர் தற்போதைய நிலையில் இந்திய அணியை சிறப்பாக தயார் செய்துள்ளார் என்றே கூறவேண்டும்.
இவரது ஆலோசனையின் பெயரிலேயே நீண்டகாலமாக கேப்டன் பதவி வகித்து வந்த சர்தார்சிங்கிடம் இருந்து பொறுப்பை பறித்து கோல் கீப்பர் ஜேஷிடம் வழங்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த ஜேஷ் தமிழக அணிக்காக விளையாடியவர். வீரர்களை ஒருங்கிணைத்து வெற்றிக்கான வியூகத்தை அமைப்பதில் சற்று கைதேர்ந்தவர்.
இந்திய அணி, ஆட்டம் தொடங்கியதுமே கோல் வாங்கி விடுவது பலவீனமாக உள்ளது. மேலும் பிற்பகுதி ஆட்டத்தில் எதிரணிக்கு ஈடுகொடுக்க முடியாமல் வீரர்கள் சோர்வடைந்து விடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் நிலைமை இப்படிதான் சென்று கொண்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற அணிகள் இந்திய அணியின் பலவீனமடைந்த தடுப்பாட்டத்தை எளிதாக உடைத்து விடுகின்றன. இந்த சமயத்தில் அதிக கோல்களும் கூட வாங்க நேரிடுகிறது. சமீபத்தில் நடைபெற்ற 6 நாடுகள் ஹாக்கித் தொடரில் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனி, அர்ஜென்டினா, அயர்லாந்து அணிகளுக்கு எதிராக ஆரம்பத்திலேயே கோல் வாங்கியது இந்திய அணி.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவர்களே. நடுகளத்தில் சர்தார்சிங் மிரட்டக்கூடியவர். முன்களத் தில் மன்பிரீத் சிங், எஸ்.வி.சுனில் ஆகி யோர் கோல் வாய்ப்புகளை உருவாக்கக் கூடியவர்களில் சிறந்தவர்கள். வி.பி ரகுநாத், ரூபேந்த்ரபால்சிங், ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் பெனால்டி கார்னர்களை கோலாக மாற்றும் திறன் படைத்தவர்கள்.
ரியோ ஒலிம்பிக்கை பொறுத்த வரை இந்தியா இடம் பெற்றுள்ள பிரிவில் ஜெர்மனி, நெதர்லாந்து, அயர்லாந்து, அர்ஜென்டினா, கனடா, ஆகிய அணிகள் உள்ளன. இதில் ஜெர்மனியையும் நெதர்லாந்தையும் தவிர மற்ற அணிகள் அனைத்தும் இந்தியாவை விட தரவரிசையில் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன.
ரியோவில் ஆகஸ்ட் 6-ம் தேதி இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. பெரிய தொடர்களில் விளையாடும்போது முதலில் வலிமை குறைந்த அணி கிடைத்தால் அந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற வேண்டும். அப்போது தான் அணியின் பலம், தன்னம்பிக்கை மேலும் அதிகரிக்கும்.
மாறாக கத்துக்குட்டிகளிடம் தடுமாறினால் அடுத்தடுத்த போட்டிகளில் ஒரு வித பதற்றம் தொற்றிக் கொள்ளும். இந்த ஒலிம்பிக்கில் அத்தகைய நிலைக்கு இடம் அளிக்காமல் இருந்தால் இந்திய அணிக்கு அது வலுசேர்க்கும்.
அயர்லாந்தை தொடர்ந்து பலம் வாய்ந்த ஜெர்மனியை இந்தியா எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து அர்ஜென்டினா, நெதர்லாந்து, கனடா அணிகளுடன் விளையாட வேண்டும். முதல் சுற்று ஆட்டத்தை பொறுத்தவரை அயர்லாந்து, கனடா, அர்ஜென்டினா அணிகளை வீழ்த்தினாலே காலிறுதிக்கு எளிதாக முன்னேறி விடலாம்.
ஒலிம்பிக் போட்டி குறித்து ஜேஷ் கூறும்போது, “தற்போது நமது அணியில் பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். கடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி எப்படி விளையாடியது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த முறை நாங்கள் சிறப்பாகத் தயாராகியிருக்கிறோம். காலிறுதியில் உலக சாம்பியனான ஆஸ்திரேலியா உட்பட எந்த அணியாக இருந்தாலும் துணிச்சலாக எதிர்கொண்டு 100 சவீத ஆட்டத்திறனை வெளிப்படுத்துவோம்’’ என்றார்.
கடந்த 2012-ல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் கடைசி இடம் பிடித்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த 7 வீரர்கள் இப்போதும் 18 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றுள்ளனர். லண்டன் ஒலிம்பிக் தந்த வலியை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த காயத்துக்கு ரியோவில் மருந்து கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருப்போம்.
மகளிர் அணி
சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்கு தற்போது தகுதி பெற்றுள்ளது. கேப்டனாக செயல்பட்ட ரீத்து ராணி அணியில் இருந்து நீக்கப்பட்டு அந்த பொறுப்பு மணிப்பூரைச் சேர்ந்த சுசீலா சானுவிடம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக மகளிர் அணியும் பல்வேறு தோல்விகளை சந்தித்துள் ளது. கேப்டன் சுசீலா சானு மிகச்சிறந்த தடுப்பாட்ட வீராங் கனை. மகளிர் அணியைப் பொறுத்தவரை அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதே கடுமையான சவால்தான். எனினும் சமீபத்தில் அமெரிக்கா, கனடா அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது அணிக்கு சற்று தெம்பை கொடுத்துள்ளது.