

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 162 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள வங்கதேசம், தொடரையும் கைப்பற்றியது.
வங்கதேசத்தின் குல்னாவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 433 ரன்களும், ஜிம்பாப்வே 368 ரன்களும் குவித்தன. பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் கடைசி நாளான நேற்று 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 314 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணி போட்டியை டிரா செய்ய வாய்ப்பிருந்தது. ஆனால் அந்த அணியில் மஸகட்ஸா மட்டுமே 61 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்க, 51.1 ஓவர்களில் 151 ரன்களுக்கு சுருண்டது. வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் சதமடித்ததோடு இரு இன்னிங்ஸ்களிலும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். டெஸ்ட் வரலாற்றில் ஒரு போட்டியில் சதம் மற்றும் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது வீரர் அல்ஹசன்.