

2013-ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக்கில் தரை ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரருக்கு, இதுவரை தமிழக அரசின் ஊக்கத் தொகை கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
சமீபத்தில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பதக்கங் களை வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த வீராங் கனைகள் நாடு முழுவதும் கொண் டாடப்பட்டனர். அவர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசுகள் குவிந்தன. அதைத் தொடர்ந்து பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் (21) உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு ரூ. 2 கோடி பரிசு வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு தென்கொரியாவின் பியோங்சங் நகரில் மனவளர்ச்சி குன்றியோருக்கான சர்வதேச குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் தரை ஹாக்கி போட்டியில் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த பாலு (22) என்பவர் இந்திய அணி சார்பில் சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால், அரசிடமிருந்து அவருக் கான ஊக்கத்தொகை இதுவரை கிடைக்கவில்லை.
இந்திய அணி சார்பில் தமிழ கத்தில் இருந்து கலந்து கொண்ட ஒரே வீரரான இவர், மதுரை அருகே கோவில்பாப்பாகுடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பெத் சான் சிறப்பு பள்ளியில் படித்தவர்.
இதுகுறித்து பாலுவின் தந்தை பாண்டி கூறியதாவது: சர்வதேச மற்றும் தேசிய அளவி லான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக விளை யாட்டு வீரர்கள், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவர்களுக்கு ரூ.2 கோடி, வெள்ளி வெல்பவர்களுக்கு ரூ.1 கோடி, வெண்கலம் வெல் பவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படுகிறது.
அதேபோல சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலுவுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினோம். மனுவை பரிசீலித்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர், அரசின் விளையாட்டுத் துறை செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில் பாரா ஆசிய விளை யாட்டு போட்டி மற்றும் உலக மாற்றுத்திறனாளர்களுக்கான போட்டியில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதை போல, சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பாலுவுக்கும் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.10 லட்சம் வழங்க ஆணை வெளியிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
ஆனால், இதுவரை அரசு சார்பில் அதுபோன்ற அரசாணை எதுவும் வெளியிடப்படவில்லை. அரசாணையின்படி ரூ.30 ஆயிரம் மட்டுமே வழங்க முடியும் என தற்போதைய உறுப்பினர் செயலர் கூறியுள்ளார். இவை முரண்பாடாக உள்ளது.
பல சவால்களை கடந்துதான் சிறப்பு ஒலிம்பிக்கில் மாற்றுத் திறனாளிகள் வெற்றி பெறு கின்றனர். எனவே அவர்களையும் பிற வீரர்களை போல அங்கீகரித்து ஊக்கத் தொகை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.