Published : 18 Oct 2013 01:21 PM
Last Updated : 18 Oct 2013 01:21 PM

தென் ஆப்பிரிக்காவை சாய்த்தது பாகிஸ்தான்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 249 ரன்களும், பாகிஸ்தான் 442 ரன்களும் குவித்தன. பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் மன்சூர் 146 ரன்களும், கேப்டன் மிஸ்பா உல் ஹக் 100 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 193 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. டிவில்லியர்ஸ் 11 ரன்களுடனும், ஸ்டெயின் ரன் ஏதுமின்றியும் இருந்தனர்.

4-வது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின் 7 ரன்களிலும், ஜே.பி.டுமினி ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, டிவில்லியர்ஸுடன் இணைந்தார் டூபிளெஸ்ஸிஸ். இதனிடையே டிவில்லியர்ஸ் சிக்ஸர் அடித்து அரைசதம் கண்டார். தென் ஆப்பிரிக்கா 133 ரன்களை எட்டியபோது டூபிளெஸ்ஸிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து டிவில்லியர்ஸுடன் ஜோடி சேர்ந்தார் ராபின் பீட்டர்சன். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தது. 157 பந்துகளைச் சந்தித்த டிவில்லியர்ஸ் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பிலாண்டர் 10 ரன்களிலும், மோர்கல் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்கா 82.4 ஓவர்களில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராபின் பீட்டர்சன் 47 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் தரப்பில் சயீத் அஜ்மல் 4 விக்கெட்டுகளையும், ஜுனைத் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பாக். வெற்றி

இதையடுத்து 40 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஷான் மசூத் ரன் ஏதுமின்றியும், பின்னர் வந்த அசார் அலி 3 ரன்களிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குர்ரம் மன்சூர் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பாகிஸ்தான்.

இதையடுத்து யூனிஸ் கானும், கேப்டன் மிஸ்பாவும் ஜோடி சேர்ந்தனர். மிஸ்பா அதிரடியாக ரன் சேர்க்க, 13.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது பாகிஸ்தான். சிக்ஸர் அடித்து போட்டியை வெற்றியில் முடித்த மிஸ்பா உல் ஹக் 26 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 28, யூனிஸ் கான் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் பிலான்டர் இரு விக்கெட்டுகளையும், ஸ்டெயின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் 146 ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி துபையில் தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி கண்ட பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 4-வது டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதுவரை தென் ஆப்பிரிக்காவுடன் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 11-ல் தோல்வி கண்டுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. மேலும் தொடர்ச்சியாக 15 டெஸ்ட் போட்டிகளில் வாகை சூடியிருந்த தென் ஆப்பிரிக்காவின் தொடர் வெற்றிக்கும் பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2011 டிசம்பரில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்ட தென் ஆப்பிரிக்க அணி, அதன்பிறகு இப்போதுதான் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளது.

கடந்த மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் படுதோல்வி கண்ட பாகிஸ்தான், இப்போது உலகின் முதல் நிலை அணியான தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருக்கிறது. இதன்மூலம் யாராலும் கணிக்க முடியாத அணி என்பதை பாகிஸ்தான் மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக மண்ணில் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது பாகிஸ்தான். முன்னதாக 2011-12-ல் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி கண்டது. அப்போது உலகின் முதல் நிலை அணியாக இருந்த இங்கிலாந்து 3 போட்டிகளிலும் தோற்றதன் எதிரொலியாக முதலிடத்தை தென் ஆப்பிரிக்காவிடம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x