பொற்காலத்துக்குத் திரும்ப வேண்டும் ஆஸ்திரேலியா

பொற்காலத்துக்குத் திரும்ப வேண்டும் ஆஸ்திரேலியா
Updated on
1 min read

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது பொற்காலத்துக்குத் திரும்ப வேண்டும். அதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை ஆஷஸ் தொடரில் தொடர வேண்டும் என அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் லீமான் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 381 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதே ஆக்ரோஷ ஆட்டத்தை தொடர் முழுவதும் வெளிப்படுத்த வேண்டும் என லீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

டென்னிஸ் லில்லி, ஜெப் தாம்ஸன், சேப்பல், ஸ்டீவ் வாக் ஆகியோர் அணியில் இருந்த நாள்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் பொற்காலம். அந்தப் பொற்காலத்துக்கு ஆஸ்திரேலிய அணி மீண்டும் திரும்ப வேண்டும்.

மெர்வ் ஹியூக்ஸ், ராட் மார்ஸ், ஆலன் பார்டர் ஆகியோர் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த அடையாளமாக விளங்கினர். நாம் விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடினாலும், முகத்தில் ஆக்ரோஷத்தை விட்டுவிடக்கூடாது. மேற்சொன்ன ஜாம்பவான்கள் காலத்தில் ஆஸ்திரேலிய அணி அப்படித்தான் இருந்தது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் போட்டியைப் போலவே, ஆஸ்திரேலியா தனது உச்சபட்ச திறனை வெளிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டர்சனைப் பார்த்து நீங்கள் உங்கள் கையை முறித்துக்கொள்ள விரும்புகிறீர்களா எனக் கேட்டு ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கிண்டல் செய்தார். அதற்காக அவருக்குப் போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in