Published : 19 Jun 2016 11:44 AM
Last Updated : 19 Jun 2016 11:44 AM

மெஸ்ஸி எட்டிய மைல்கல்: வெனிசூலாவை வீழ்த்தி அரையிறுதியில் அர்ஜெண்டீனா

அமெரிக்காவில் நடைபெறும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் வெனிசூலா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டீனா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதியில் அமெரிக்காவைச் சந்திக்கிறது அர்ஜெண்டீனா. மெஸ்ஸி தனது 54-வது சர்வதேச கோலை அடித்து கப்ரியேல் பேட்டிஸ்டுடாவின் சாதனையை சமன் செய்து புதிய அர்ஜெண்டீன மைல்கல்லை எட்டினார்.

ஒரு கோலை அடித்த மெஸ்ஸி, 2 கோல்களுக்குக் காரணமாக அமைந்தார். கொன்சாலோ ஹிகுவெய்ன் இருமுறை கோல் போட்டார். தொடக்கம் முதலே மெஸ்ஸி மிகவும் அபாயகரமாகத் திகழ்ந்தார். தொடக்கத்திலேயெ அர்ஜெண்டீன ரசிகர்கள் ஆரவாரம் முழங்க மெஸ்ஸி வெனிசூலா தடுப்பை உடைத்துக் கொண்டு வெனிசூலா கோல்பகுதிக்குள் நுழைந்தார். அங்கிருந்து ஒரு ஷாட்டை ஆட அதனை வெனிசூலா கோல் கீப்பர் டேனியல் ஹெர்னாண்டஸ் பிடித்தார்.

சரியாக 2 நிமிடங்களுக்குப் பிறகு மெஸ்ஸி மீண்டும் அச்சுறுத்தினார். மீண்டும் உள்ளே புகுந்து கோலை நோக்கி அடித்த ஷாட் வெளியே சென்றது.

8-வது நிமிடத்தில் மெஸ்ஸியின் ஆட்டம் கோலைப் பெற்றுத் தந்தது. இரண்டு வெனிசூலா தடுப்பு வீரர்களுக்கிடையே ஒரு அருமையான பாஸ்ஸை தூக்கி அடித்தார். அப்போது சறுக்கிக் கொண்டு வந்த ஹிகுவெய்ன் கோலாக மாற்றினார், அர்ஜெண்டீனா 1-0 என்று முன்னிலை பெற்றது

3 நிமிடங்களுக்குப் பிறகு மெஸ்ஸி முன்னிலை கொடுத்திருப்பார். வெனிசூலா கோல் கீப்பர் தவறிழைக்க பந்தைச் சாதுரியமாக பெற்ற மெஸ்ஸி 25 அடியிலிருந்து கோல் நோக்கி ஒருஷாட்டை முயன்றார். ஆனால் அது வெனிசூலாவின் அதிர்ஷ்டமாக வெளியே சென்றது.

வெனிசூலாவும் சும்மா வேடிக்கைப் பார்க்கும் அணி அல்ல என்பதை நிரூபித்தது. சாலமன் ரோண்டன் அங்கு அச்சுறுத்தலாகத் திகழ்ந்தார். சாலமன் ரோண்டன் கோலை நோக்கி விரைவு கதியில் எடுத்து வர கோலாகாமல் அது கார்னராக அர்ஜெண்டீன கோல் கீப்பர் ரொமீரோ காரணமானார்.

22-வது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸி பந்தை எடுத்துக் கொண்டு அச்சுறுத்தல் நகர்வு மேற்கொள்ள அவரை வெனிசூலா வீரர் ஆர்க்கிமிடிஸ் பிகுயெரா பின்னாலிலிருந்து தடுக்க முயன்றார், இது உண்மையில் பெனால்டி கொடுக்க வேண்டிய ஃபவுல், ஆனால் மெக்சிகோ நடுவர் ரொபர்டொ கார்சியா, அவர் பந்தை தடுக்கவே முயன்றார் என்று விளக்கம் அளித்தார்.

பிறகு ஹிகுவெயினின் ஷாட் ஒன்று கோல் அருகே தடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு சிறிது நேரத்திற்கெல்லாம் வெனிசூலாவின் பிகுயெரா பின்பக்கமாக பாஸ் செய்த மோசமான முயற்சியால் பந்து ஹிகுவெய்னிடம் சிக்க அவர் 2-வது கோலை அடித்தார்.

முதல் பாதியில் வெனிசூலாவின் நிறைய வாய்ப்புகள் கோலாக மாற முடியவில்லை. முதலில் ரொமீரோ, ரோண்டனின் ஷாட்டை தடுத்தார், பிறகு ரோண்டனின் தலையால் ஆடிய ஷாட் ஒன்று போஸ்டில் பட்டு திரும்பியது.

44-வது நிமிடத்தில்தான் வெனிசூலாவின் மோசமான தருணம் நிகழ்ந்தது. ஒரு ஷாட்டை எதிர்கொள்ளும் முயற்சியில் ஜோசப் மார்டினெஸை எதிர்கொண்டார் இதனால் பெனால்டி வாய்ப்பு வெனிசூலாவுக்குக் கிடைத்தது. ஸ்பாட் கிக்கை லூயிஸ் செய்ஜாஸ் அடிக்க அதனை ரொமீரோ பிடித்தார், ஒன்றுமில்லாத ஷாட்டாக அது அமைந்தது.

இந்நிலையில் மெஸ்ஸி கோப்பா அமெரிக்காவின் இந்தத் தொடரில் தனது 4-வது கோலை அடித்தார். வெனிசூலா வீரர் ஆஸ்வால்டோ விஸ்கராண்டோ தங்களது பகுதியிலேயே பந்தை விட்டுக் கொடுத்தாலும் அர்ஜெண்டீன வீரர் நிகோலஸ் கெய்ட்டன் வேகமாக ஓடி வந்து பந்தை மெஸ்ஸியிடம் அளிக்க அவர் ஹெர்ணாண்டஸை தாண்டி கோலாக மாற்றினார், 3-1.

70-வது நிமிடத்தில் அலியாண்ட்ரோ குவெராவின் கிராஸை சாலமன் ரோண்டன் கோலாக மாற்ற வெனிசூலா கணக்கைத் தொடங்கியது, ஆனால் இதுவே அந்த அணிக்கு ஆறுதல் கோலாகவும் அமைந்தது. காரணம் சிறிது நேரத்திற்கெல்லாம் மெஸ்ஸியின் அருமையான பாஸை பதிலி வீரர் எரிக் லமீலா கோலாக மாற்ற அர்ஜெண்டீனா 4-1 என்று வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x