Published : 21 Aug 2014 04:27 PM
Last Updated : 21 Aug 2014 04:27 PM

அனுபவமின்மையே இந்திய அணியின் தோல்விக்கு காரணம்: ரவி சாஸ்திரி

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரி, தனது நியமனம் டன்கன் பிளெட்சரின் பங்களிப்பை எந்த விதத்திலும் குறைக்காது என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் மோசமான தோல்விகளுக்கு அனுபவமின்மையே காரணம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

"எனது பணி, அனைத்தையும் மேற்பார்வை செய்வது. அனைவரும் எனக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும். இது இந்த ஒருநாள் தொடருக்கு மட்டுமே” என்று ஈ.எஸ்.பி.என் நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறியது:

"இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கியமான காலக் கட்டமாகும் இது. நான் பங்களிப்பு செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தப் பணி கடினமாக இருக்குமா அல்லது எளிதாக இருக்குமா என்பதையெல்லாம் நான் யோசிக்கவில்லை. பிசிசிஐ-யினால் நான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன். அவர்கள்தான் எனக்கு ஜூனியர் கிரிக்கெட்டிலும் சரி பிறகு தேசிய கிரிக்கெட்டிற்கும் சரி அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

நான் பிளெட்சர் மற்றும் தோனியிடம் 2 மணி நேரங்கள் பேசினேன், இப்போது இந்திய கிரிக்கெட் எந்த ஸ்திதியில் உள்ளது என்பதைப் பற்றி பேசினோம். இனி விஷயங்கள் எப்படி இருக்க வேண்டும், தொடர்பு படுத்துவது என்பது மிக முக்கியம் என்று பேசினோம்.

தோல்விகளைப் பற்றிப் பேசினால், இந்த அணி ஒரு டெஸ்ட் போட்டியில் அபாரமாக வென்றது. அனுபவமற்ற அணி குறைந்தபட்சம் ஒரு வெற்றியையாவது பெற்றுள்ளதே.

1974ஆம் ஆண்டு 3-0 என்று தோற்றோம். கடந்த இங்கிலாந்து தொடரில் அணியில் சில பெரிய பெயர்கள் இருந்தும் 4-0 என்று தோற்றோம். இந்தத் தொடரில் லார்ட்ஸ் டெஸ்டில் அபாரமான ஒரு டெஸ்ட் வெற்றியை இந்த அனுபவமற்ற அணி பெற்றுத் தந்தது. அதன் பிறகு சரணடைந்தது.

3-1 என்ற தோல்வியை மக்கள் எப்போது ஏற்பார்கள்? போராடித் தோல்வி கண்டால் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் முதுகெலும்பற்ற ஆட்டமாக அமைந்தது. அனைத்தையும் மதிப்பிட வேண்டுமென்றால் அனுபவமின்மை என்பதையே நான் காரணமாகக் கூறுகிறேன், அடுத்த முறை இந்த அணி சிறப்பாக விளையாடும் என்பதற்கான நம்பிக்கை இருக்கிறது.

40 நாட்களில் 5 டெஸ்ட் போட்டிகளை விளையாடும் போது உடற்தகுதி நம் வீரர்களை ஏய்த்து விடுகிறது.

எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது என்னவெனில் செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்தனர். எல்லோருக்கும் தோல்வி ஏற்படுவது சகஜம்தான். ஆனால் அதைத் திருத்திக் கொள்ள வித்தியாசமாக எதையாவது முயற்சி செய்ய வேண்டும், அலிஸ்டர் குக்கை எடுத்துக் கொள்ளுங்கள், அவர் கிரீசில் நிற்கும் நிலையை மாற்றிக் கொண்டார். 2 அடிகள் முன்னால் வந்து நின்றார். திரும்பத் திரும்ப செய்த தவறையே செய்வதற்குப் பதிலாக வித்தியாசமாக ஏதாவது முயற்சி செய்வது அவசியம்.

சுனில் கவாஸ்கர் 1981ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் திணறினார். ராகுல் திராவிட் 1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ரன்களையே எடுக்க முடியவில்லை. ஆனால் இவர்கள் எப்படி அதனை எதிர்கொண்டு மீண்டு வந்தனர் என்பது முக்கியம். விராட் கோலி, புஜாரா மீது எனது விமர்சனம் அத்தகைய பார்வையிலிருந்து வந்ததே” என்றார் ரவி சாஸ்திரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x