

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 2015-ல் நடக்கவுள்ள அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக இந்திய பேட்டிங் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்த உலகக் கோப்பையில் முக்கியப் பங்கு இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் சச்சினின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற சச்சினிடம் 2015 உலகக் கோப்பையை பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த சச்சின், "இந்திய அணி பலரை ஆச்சரியப்படுத்தும். சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் உள்ள களங்களின் தன்மை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என சிலர் கூறலாம். ஆனால் மைதானங்களின் அளவைக் கொண்டு பார்த்தால் சுழற்பந்து வீச்சு முக்கியமானதாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் கருப்பு குதிரைகளைப் போல. மேலும் இந்தியாவுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. என்னைப் பொருத்தவரை இந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறவேண்டும்" என சச்சின் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணிக்கான வாய்ப்புகளைப் பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, இங்கிலாந்து அணி தற்போது இருக்கும் நிலையில் அதனால் இந்தப் போட்டியில் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே. ஆனால் கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என சச்சின் பதிலளித்தார்.