

இங்கிலாந்து இந்திய அணியிடம் சரணடைந்ததைப் பார்த்த பிறகே இந்தியாவுக்கு எதிரான தொடர் எளிதாக இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை என்று ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என்று கைப்பற்றியதையடுத்து அடுத்ததாக இந்தியாவுக்கு எதிரான தொடர் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:
நிச்சயமாக இந்தியாவுக்கு எதிரான தொடர் கடினமாகவே இருக்கும், கடினமாக இருக்காது என்ற மாயையில் நாங்கள் இல்லை. அங்கு சவாலாகத் திகழ நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். மிகப்பெரிய சவாலாகும் தொடர் அது என்பதோடு, எங்களுக்கு கற்றுக் கொள்வதற்கும் நிறைய உள்ளன.
எங்களில் சிலர் ஏற்கெனவே இந்தியாவில் ஆடியுள்ளோம், இந்திய அணியை எதிர்த்து அவர்கள் மண்ணில் ஆடுவது மிக மிகக் கடினமானது. அது முற்றிலும் வேறு ஒரு இடமாகும். ஆஸ்திரேலியா பிட்ச்களில் ஆடுவதும் அங்கு ஆடுவதும் முற்றிலும் வேறுபட்டது” என்றார்.
பயிற்சியாளர் டேரன் லீ மேன் கூறும்போது, ”நீண்ட நேரம் பேட்டிங் ஆடுவது முக்கியம். அலிஸ்டர் குக் இந்தியா தொடர் குறித்து சுருக்கமாக கூறியது மிக முக்கியம், அவர் கூறினார், நீண்ட நேரம் இங்கிலாந்து பேட் செய்ய முடியவில்லை என்று, இங்கிலாந்து சுமாராக ரன்களை எடுத்தது, ஆனால் போதுமான அளவுக்கு அதிக ஓவர்களை ஆடவில்லை. ஆஸ்திரேலியர்களுக்கும் இதுதான் சவால்.
சிட்னியில் 135 ஓவர்களை முதல் இன்னிங்சில் ஆடினோம். ஆனால் 150க்கும் அதிகமான ஓவர்களை ஆட வேண்டும். அப்போதுதான் பெரிய ரன் எண்ணிக்கையை எடுக்க முடியும். இது இளம் அணிக்கு மிகவும் பெரிய சவால். ஆனால் உடற்தகுதி உள்ளது, வலுவாக உள்ளனர் இதனால் அதிக ஓவர்களை ஆட முடியும் என்று நம்புகிறேன்.
பிட்ச்கள், சூழலைப்பொறுத்து அணிச்சேர்க்கை அமையும். 20 இந்திய விக்கெட்டுகளை வீழ்த்த ஒவ்வொருவரும் செய்யும் பங்களிப்பை யோசித்து அணித் தேர்வு செய்வோம்” என்றார்.