

சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்த உலகிற்காகவும் நிறைய சாதனைகளை செய்திருக்கிறார் என்று ஜமைக்கா தடகள வீரர் யோகன் பிளேக் புகழாரம் சூட்டினார்.
டெண்டுல்கர் குறித்து அவர் மேலும் கூறியது: "எனது குழந்தைப் பருவ கதாநாயகனான சச்சினின் புகழ் எல்லை தாண்டி பரவிக் கிடக்கிறது. அவரைப் பற்றி பேசுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்."
"எல்லோரும் எல்லா காலத்திலும் பின்பற்றக்கூடிய பாரம்பரியத்தை சச்சின் விட்டுச் சென்றிருக்கிறார். எனக் கூற விரும்புகிறேன். மிகவும் பணிவுமிக்க மனிதரான அவர், உலகில் உள்ள அனைவருடைய நெஞ்சத்தையும் தொட்டிருக்கிறார். அவர்கள் அனைவரும் சச்சினின் பாதையை பின்பற்றுவார்கள் என நம்புகிறேன்"
"சச்சினுடன் முதல்முறையாக பேசுவதற்கு கிடைத்த வாய்ப்பை நினைவுகூர விரும்புகிறேன். அப்போது நான் உங்களுக்கு பந்துவீச விரும்புகிறேன் என அவரிடம் கூறினேன். என்னுடைய குழந்தைப் பருவ கதாநாயகன்களில் சச்சினும் ஒருவர் என்பதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன்".
"சச்சின் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது, அது மிகவும் வருத்தமான செய்தி என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவர் இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்த உலகிற்காகவும் நிறைய சாதனைகளை செய்திருக்கிறார்".
"தனி மனிதராக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 ஆயிரம் ரன்களைக் குவித்திருக்கிறார். அதற்காக அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். கிரிக்கெட்டுக்கு பிறகான அவருடைய வாழ்க்கை சிறப்பாக அமைய என் வாழ்த்துகள். எனக்கு மட்டுமின்றி ஏராளமானோருக்கு தூண்டுதலாக இருந்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் யோகன் பிளேக்.
ஜமைக்காவின் முன்னணி தடகள வீரரான உசேன் போல்ட்டை போலவே, யோகன் பிளேக்கும் தீவிர கிரிக்கெட் ரசிகர் ஆவார். லண்டன் ஒலிம்பிக்கில் இரு வெள்ளிப் பதக்கங்கள் வென்றவரான இவர், தொடர்ச்சியான போட்டிகளுக்கு மத்தியிலும், சச்சின் பேட்டிங் செய்வதைத் தவறாமல் பார்க்கக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.