Last Updated : 15 Apr, 2017 04:47 PM

 

Published : 15 Apr 2017 04:47 PM
Last Updated : 15 Apr 2017 04:47 PM

34 போட்டிகள் காத்திருப்புக்குப் பிறகு ஹாட்ரிக்: குஜராத் அணி சாதனையாளர் ஆண்ட்ரூ ஜேம்ஸ் டை நெகிழ்ச்சி

ஐபிஎல் கிரிக்கெட்டில் இரண்டு அணிகளில் சுமார் 34 போட்டிகள் பெஞ்சில் அமர்ந்திருந்த ஆண்ட்ரூ ஜேம்ஸ் டை, நேற்று குஜராத் அணிக்காக புனே அணி தோல்விக்கு தனது ஹாட்ரிக் மூலம் பங்களிப்பு செய்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் லயன்ஸ் கேப்டன் சுரேஷ் ரெய்னா முதலில் புனே அணியை பேட் செய்ய அழைத்தார். ஸ்மித் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுக்க புனே அணி முதலில் பேட் செய்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது. இதில் ஆண்ட்ரூ ஜேம்ஸ் டை என்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கடைசி ஓவரில் அன்கிட் ஷர்மா, திவாரி, தாக்குர் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியதோடு 5 விக்கெட்டுகளை 17 ரன்களுக்கு கைப்பற்றினார். தோனி மீண்டும் சோபிக்காமல் 5 ரன்களில் ஜடேஜாவிடம் எல்.பி.ஆகி வெளியேறினார்.

தொடர்ந்து ஆடிய குஜராத் லயன்ஸ் அணி, 18 ஓவர்களில் 178/3 என்று வெற்றி பெற்று முதல் வெற்றியைப் பதிவு செய்தது. டிவைன் ஸ்மித் 30 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 47 ரன்களையும் பிரெண்டன் மெக்கல்லம் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 49 ரன்களையும் விளாசி 8.5 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 94 ரன்கள் கூட்டணி அமைத்தனர். பிறகு ரெய்னா (35), பிஞ்ச் (33) ஆகியோர் 6 ஓவர்களில் 61 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்து 172/3 என்று வெற்றி பெறச் செய்தனர். முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனை, 5 விக்கெட் என்று அசத்திய வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ ஜேம்ஸ் டை ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

“நான் 34 போட்டிகள் காத்திருந்தேன். முதல் வாய்ப்பைப் பெற்றவுடன் எனக்கு அழுத்தம் எதுவும் இல்லை, நான் சில விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன், இதைவிட சிறந்த அறிமுக போட்டி எனக்கு கிடைக்காது.

பல பெரிய பயிற்சியாளர்களிடன் நம் ஆட்டத்திறனை வளர்த்துக் கொள்ள ஐபிஎல் போட்டிகள் ஒரு சிறந்த மேடை. இவ்வளவு நாட்களாக எனக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் நிச்சயம் வாய்ப்பு கிட்டும் என்றே நம்பிக்கையுடன் காத்திருந்தேன். வாய்ப்பு கிடைத்தவுடன் அழுத்தமின்றி என்னை நான் வெளிப்படுத்தினேன்.

வேகம் குறைத்து வீசும் பந்துகள் எனது சிறப்பான பந்தாகும், இந்த பிட்சில் இது சரியாகக் கைகூடியது மகிழ்ச்சியளிக்கிறது.

வேகம் குறைந்த பந்துகள் பிட்சில் நின்று வருவதை உடனடியாக உணர்ந்தேன், பேட்ஸ்மென்களுக்கு மேலும் கஷ்டத்தை ஏற்படுத்தினேன்.

குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் விக்கெட் எனக்கு திருப்தி அளித்தது, ஏனெனில் அவர் நன்றாக ஆடிவந்தார், அபாயகரமாகத் திகழ்ந்தார். சரியான நேரத்தில் அவரை வீழ்த்தியது எனக்கு நல்ல விஷயமானது.

ஒரே நாளில் இருவேறு போட்டிகளில் இரு பவுலர்கள் ஹாட்ரிக் எடுத்தது (சாமுவேல் பத்ரி, ஜேம்ஸ் டை) அரிதானதே. எனவே டி20 போட்டிகள் பேட்ஸ்மென்களுக்கானதே என்ற பார்வையை இரு ஹாட்ரிக்குகள் கேள்விக்குட்படுத்துகிறது” இவ்வாறு கூறினார் ஜேம்ஸ் டை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x