

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 83 ரன்கள் எடுத்த சேதேஷ்வர் புஜாரா, இந்திய அணியின் முன்னாள் வீரரான சந்து போர்டேவின் சாதனையை முறியடித்தார். சந்து போர்டே 1964-65ம் ஆண்டு சீசனில் டெஸ்ட் மற்றும் முதல்தர போட்டியில் 1604 ரன்கள் சேர்த்தார். அவர் 28 இன்னிங்ஸ்களில் 64.16 சராசரியுடன் 6 சதங்கள் அடித்து இந்த ரன்களை சேர்த்தார். ஒரு சீசனில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்களாக இதுவே இருந்தது.
இந்த 52 வருட சாதனையை தற்போது புஜாரா முறியடித்துள் ளார். அவர் நேற்றைய ஆட்டத்தில் சேர்த்த ரன்கள் (83) மூலம் 2016-2017 சீசனில் இதுவரை 1605 ரன்கள் குவித்து சந்து போர்டேவின் சாதனையை தகர்த்துள்ளார்.
21 இன்னிங்ஸ்களில் 89.16 சராசரியுடன் இந்த ரன்களை சேர்த்துள்ளார் புஜாரா. இதில் 6 சதங்களும் அடங்கும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதால் இந்த சீசனில் புஜாரா 2 ஆயிரம் ரன்களை கடக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
சுவாரஸ்யமாக இந்திய வீரர்களில் ஒரு சீசனில் அதிக சராசரியுடன் ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் புஜாரா 3-வது இடத்தில் உள்ளார். அவர் கடந்த 2012-13ம் ஆண்டு சீசனில் 93.23 சராசரியுடன் 1585 ரன்களை குவித்தார்.