

சச்சின் டெண்டுல்கரிடம் அவரது எதிர்காலத் திட்டம் குறித்து பேசவில்லை என இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் எதிர்காலத் திட்டம் குறித்து, அவரிடம் சமீபத்தில் சந்தீப் பாட்டீல் பேசியதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்த சந்தீப் பாட்டீல்,”சச்சின் டெண்டுல்ரை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம்.ஆனால், கடந்த 10 மாதங்களாக அவரை சந்திக்கவே இல்லை.நான் அவரை தொடர்புகொள்ளவும் இல்லை.அவரிடம் எந்த விவகாரம் குறித்தும் நான் விவாதிக்கவில்லை” என்றார்.
மேலும், “எங்களிடம் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்கள் மிகச் சிறப்பாக அணிக்குத் தங்கள் பங்களிப்பைச் செய்துவருகிறார்கள். சச்சின் டெண்டுல்கர் குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாது. அவரது பங்களிப்பு மகத்தானது. ஆனால், எதிர்காலத்தையும் கருத்தில்கொள்ள வேண்டியது அவசியம்.ட் தங்கள் திறமை நிரூபிக்க தகுந்த வாய்ப்புக்காக இளம் திறமையாளர் பலர் காத்திருக்கிறார்கள்” என்றார் அவர்.
முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் தொடரில் சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதுதொடர்பாக, சச்சினுடன் சந்தீப் பாட்டீல் பேசியதாகவும் தகவல்கள் வெளியானதால் சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.