நடுவரிடம் மரியாதை குறைவாக நடந்த ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எச்சரிக்கை

நடுவரிடம் மரியாதை குறைவாக நடந்த ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எச்சரிக்கை
Updated on
1 min read

இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின்போது நடுவர் எஸ்.ரவியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதையடுத்து இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் எச்சரிக்கப்பட்டார்.

இதனை ஜேம்ஸ் ஆண்டர்சனே ஒப்புக் கொண்டதால் விசாரணை தேவையில்லை என்று கூறிய மேட்ச் ரெஃப்ரீ ஆன்டி பைகிராப்ட், ஆண்டர்சனை எச்சரித்து விடுவித்தார்.

இலங்கை அணியின் குசல் பெரேரா, ரங்கனா ஹெராத் இணைந்து ஆடிக் கொண்டிருந்த போது விக்கெட்டுகளை எதிர்பார்த்த வேகத்தில் வீழ்த்த முடியவில்லை. இதனால் வெறுப்படைந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், இலங்கை வீரர் ஹெராத்தை கேலியும் கிண்டலும் செய்யத் தொடங்கி தனது வெறுப்பைக் காட்டினார்.

நடுவர் எஸ்.ரவி தலையிட்டு ஹெராத்தை ஸ்லெட்ஜ் செய்ய வேண்டாம் என்று ஆண்டர்சனை கண்டித்தார். ஆனால் ஆண்டர்சன் நடுவர் ரவியின் அறிவுரையை மதிக்கவில்லை.

அப்போது அலிஸ்டர் குக் மைதானத்தில் இல்லாததால் ஜோ ரூட் இங்கிலாந்து அணியை வழிநடத்திச் சென்றார். நடுவர் எஸ்.ரவி, தொடர்ந்து ரூட்டிடம் இது குறித்து ஆலோசனை நிகழ்த்தினார்.

இதனையடுத்து எஸ்.ரவி, ராட் டக்கர் ஆகிய கள நடுவர்கள், 3-வது நடுவர் அலீம் தார், 4-வது நடுவர் மைக்கேல் காஃப் ஆகியோர் ஆண்டர்சன் மீது புகார் எழுப்பினர். இதனையடுத்து ஆண்டர்சன் எச்சரிக்கப்பட்டார்.

ஜடேஜாவை ஒருமுறை ஓய்வறை அருகே கீழேதள்ளிய விவகாரம் உட்பட ஜேம்ஸ் ஆண்டர்சன் மைதானத்தில் தனது ஆக்ரோஷத்தை கிரிக்கெட் உணர்வுகளுக்கு எதிராக காட்டி வருவது வாடிக்கையாகி வருகிறது.

இலங்கை வெற்றி பெற 362 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அந்த அணி 4-ம் நாள் ஆட்ட முடிவில் 32/0 என்று ஆடி வருகிறது, 5-ம் நாளான இன்று மழை காரணமாக ஆட்டம் தொடங்க தாமதமாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in