

டிஎன்பிஎல் தொடரில் நேற்று தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.
திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத் தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த காரைக்குடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. விஜய் குமார் 1, அனிருதா 3, விஷால் வைத்யா 7, நிவாசன் 10, ராஜ் குமார் 1, ஷோயிப் முகமது கான் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் பத்ரிநாத் 46 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 49 ரன்களும், கணபதி 17 பந்தில், 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்களும் எடுத்தனர். தூத்துக்குடி அணி தரப்பில் அஸ்வின் கிறிஸ்ட் 3, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து 112 ரன்கள் இலக்குடன் தூத்துக்குடி அணி பேட் செய்தது. எளிதான இலக்கு அமைந்த நிலையில் அந்த அணி ஆரம்பம் முதலே மந்தமாகவே விளையாடியது. அபிநவ் முகுந்த் 8, வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னில் வெளியேறினர்.
10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்களை எடுத்தது. அதன் பின்னர் சீரான இடைவேளை யில் காரைக்குடி அணியினர் விக்கெட்களை கைப்பற்றியதுடன் ரன்விகிதத்தை கட்டுக்குள் வைத்திருந்தனர். 17 ஓவர்களில் தூத்துக்குடி அணி 6 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலையில் 18-வது ஓவரை வீசிய சுரேஷ் பாபு வெறும் 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். அடுத்த ஓவரை வீசிய ராஜ்குமார் 5 ரன்கள் வழங்க கடைசி ஓவரில் தூத்துக்குடி அணிக்கு நெருக்கடி அதிகமானது.
6 பந்தில் 12 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இந்த ஓவரை வீசிய கணபதி 3 விக்கெட்களை சாய்த்தார். அஸ்வின் கிறிஸ்ட் 5, ஆகாஷ் சும்ரா 18, கனேஷமூர்த்தி 0 ரன்களில் நடையை கட்ட 20 ஓவர்கள் முடிவில் தூத்துக்குடி அணி 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது.
முதல் வெற்றி
அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக காந்தி 27, ஆனந்த் 24 ரன்கள் எடுத்தனர். காரைக்குடி தரப்பில் கணபதி 3, ராஜ்குமார் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக கணபதி தேர்வானார். காரைக்குடி அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது.
முன்னதாக அந்த அணி இரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்திருந்தது. அதேவேளையில் தூத்துக்குடி அணி தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்தித் துள்ளது. அந்த அணி முதல் ஆட்டத் தில் மட்டும் வெற்றி பெற்றி ருந்தது.