

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு (ஐஓஏ) கடந்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றதைத் தொடர்ந்து அதன் மீதான தடையை நீக்கியுள்ளது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி). இதன்மூலம் 14 மாதங்களுக்குப் பிறகு ஐஓஏவுக்கு மீண்டும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக ஐஓஏவின் புதிய பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா கூறுகையில், “இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான தடை நீக்கப்பட்டுவிட்டதாக தொலை பேசி மூலம் ஐஓசி எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது” என்றார்.
சர்வதேச நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கான ஐஓசி தலைவர் ஜெரோம், “ஐஓஏ விதிமுறைகளில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம் மிகச்சிறந்தது. அது முழுவதுமாக அமல்படுத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தலின்போது ஐஓசியின் விதிமுறைகள் பின்பற்றப் படவில்லை, அரசின் தலையீடு இருக்கிறது, ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப் பட்டுள்ளனர் என்பது உள்ளிட்ட காரணங்களைக் கூறி ஐஓஏவை 2012 டிசம்பர் 4-ம் தேதி சஸ்பென்ட் செய்தது ஐஓசி.
அதைத் தொடர்ந்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான தடையை நீக்குவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. கடந்த மே 15-ம் தேதி ஸ்விட்சர்லாந்தின் லாசனில் நடைபெற்ற ஐஓசி கூட்டுக் கூட்டத்தின்போது, ஜூலை 15-ம் தேதிக்குள் ஐஓஏ விதிமுறையில் திருத்தம் கொண்டு வருவது எனவும், செப்டம்பர் 1-ம் தேதிக்குள் புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக் கக்கூடாது என ஐஓசி நிபந்தனை விதித்தது.
ஆனால் ஐஓஏவோ, சிறைத்தண்டனை பெற்றவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் எனக் கூறியது. எனினும் ஐஓசி தனது முடிவில் உறுதியாக இருந்ததால், வேறு வழியின்றி ஊழல் வழக்குகளில் சிக்கியவர்களான அபய் சிங் சௌதாலா, லலித் பனோட் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. மறுதேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. அதில் தலைவராக சர்வதேச ஸ்குவாஷ் சம்மேளன தலைவரும், பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் சகோதரருமான ராமச்சந்திரன் தலைவராகவும், ராஜீவ் மேத்தா செயலராகவும், அனில் கண்ணா பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து இப்போது ஐஓஏ மீதான தடை நீக்கப்பட்டிருக்கிறது. இந்திய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் தேசியக் கொடியின் கீழ் பங்கேற்கும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். ரஷியாவின் சூச்சி நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய வீரர்கள் 3 பேரும் சர்வதேச கொடியின் கீழ் பங்கேற்றனர். எனினும் இப்போது தடை நீக்கப்பட்டிருப்பதன் மூலம் நிறைவு விழாவில் அவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்துங்கள்
ஐஓஏ மீதான தடை நீக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த முன்னாள் ஐஓஏ தலைவரான விஜய்குமார் மல்ஹோத்ரா, “தடை நீக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இனி இந்திய வீரர்கள், சர்வதேச போட்டிகளில் இந்திய தேசியக் கொடியின் கீழ் பங்கேற்கலாம். இந்த ஆண்டில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தயாராவதில் இந்தியா தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.