Last Updated : 10 Mar, 2017 01:53 PM

 

Published : 10 Mar 2017 01:53 PM
Last Updated : 10 Mar 2017 01:53 PM

காயமடைந்த மிட்செல் ஸ்டார்க் தொடரிலிருந்து விலகல்

வலது பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்திய தொடரிலிருந்து விலகியுள்ளார்.

பெங்களூரு டெஸ்ட் போட்டியின் போது இவருக்கு தொல்லைகள் ஏற்பட போட்டி முடிந்த பின்பும் வலி குறையாத காரணத்தினால் ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவர அவர் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவருக்குப் பதிலி வீரரை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் இன்னும் அறிவிக்கவில்லையென்றாலும் ஜேக்சன் பேர்ட் என்ற இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் ராஞ்சி டெஸ்ட் போட்டியில் புதிய பந்தை ஹேசில்வுட்டுடன் பகிர்ந்து கொள்வார் என்று தெரிகிறது.

ஏற்கெனவே ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தோள்பட்டை காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதையடுத்து தற்போது ஸ்டார்க் விலகல் அந்த அணிக்கு நிச்சயம் பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ஷுக்குப் பதிலாக ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்டார்க் இந்தத் தொடரில் முக்கிய விக்கெட்டுகளை முக்கியத் தருணங்களில் கைப்பற்றினார், குறிப்பாக புனேயில் அவர் புஜாரா, கோலியை அடுத்தடுத்து வீழ்த்தியது இந்திய அணியை சரிவுக்கு இட்டுச் சென்றதோடு ஆஸி.க்கு இந்தியாவில் ஒரு அரிய வெற்றியையும் பெற்றுத்தந்தது.

இலங்கையில் கிட்டத்தட்ட இதை விடவும் மோசமான ஸ்பின் பிட்ச்களில் ஸ்டார்க் 24 விக்கெட்டுகளை 3 டெஸ்ட் போட்டிகளில் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்குள் ஸ்டார்க் குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x