Last Updated : 23 Jul, 2016 09:40 AM

 

Published : 23 Jul 2016 09:40 AM
Last Updated : 23 Jul 2016 09:40 AM

ஐஎஸ்எல் கால்பந்து தொடரிலிருந்து கோவா அணி உரிமையாளர்கள் விலகல்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து இறுதிப் போட்டியில் கோவா அணியை வீழ்த்தி சென்னையின் எப்.சி. அணி பட்டம் வென்றது. அப்போது வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடு பட்டபோது கோவா அணியின் உரிமையாளரை தாக்கியதாக சென்னை அணி கேப்டன் இலானோ புளூமர் கைது செய்யப்பட்டார்.

புளூமர், கோவா அணியின் இணை உரிமையாளர் தத்தா ராஜ் சல்கோகரை அவமரியாதையாக பேசியதாக புகார் கூறப்பட்டது. மேலும் பரிசளிப்பு விழாவையும் கோவா அணி புறக்கணித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி போட்டி அமைப்புக்குழு ஐஎஸ்எல் தொடருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக கோவா அணிக்கு ரூ.11 கோடி அபராதம் விதித்தது. மேலும் கோவா அணியின் உரிமையாளர்களான சீனிவாஸ் டெம்போ, தத்தாராஜ் சல்கோகர் ஆகியோருக்கு முறையே தலா 2 மற்றும் 3 ஐஎஸ்எல் சீசன்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதுதவிர அடுத்த சீசனில் கோவா அணிக்கு 15 புள்ளிகள் கழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டது. இதனால் இந்த ஆண்டு அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்க நேரிடும் சூழ்நிலை உருவானது.

இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து ஐஎல்எஸ் போட்டி ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோவா அணி மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த ஒழுங்குமுறை ஆணையம் நேற்று முடிவை அறிவித்தது. அணி உரிமையாளர்களுக்கு விதிக்கப் பட்ட தடையையும், 2016-ம் ஆண்டு சீசனில் 15 புள்ளிகள் கழிக்கப்படும் என்ற உத்தரவும் விலக்கிக்கொள்வதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவா அணி இந்த சீசனில் எந்தவித சிரமமும் இன்றி மற்ற அணிகளை போன்று விளையாட முடியும்.

முதல்முறையாகவே இது போன்ற சம்பவம் நடை பெற்ற தாலும், கோவா அணி தரப்பிலும் இலானோ புளூமரும் நடைபெற்ற சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து விளக்க கடிதம் வழங்கியதன் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போட்டி அமைப்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஒழுங்குமுறை ஆணையம் தனது தீர்ப்பை அறிவித்த சில மணி நேரங்களில் கோவா அணியின் இணை உரிமையாளர்களான சீனி வாஸ் டெம்போ, தத்தாராஜ் சல்கோ கர் ஆகியோர் அணியில் உள்ள தங்களது பங்குகளை விலக்கிக் கொள்வதாக அறிவித்தனர்.

கடந்த ஆண்டு இறுதிப் போட்டியின் போது ஏற்பட்ட சம்பவம் மன ரீதியாகவும், குடும்பத் திலும் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கியதால் ஐஎஸ்எல் தொடரில் இருந்து விலகுவதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

கோவா அணியின் உரிமை யாளர்களாக 4 பேர் இருந்தனர். தற்போது இருவர் விலகியுள்ளதால் வீடியோகான் நிறுவனம் மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் மட்டும் உரிமையாளர்களாக தொடர்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x