

மே.இ.தீவுகள் வீரர் மர்லன் சாமுவேல்ஸ் ஜமைக்காவின் நிழலுலக கிரிமினல்களுடன் தொடர்புடையவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜெஃப் லாசன் கூறியதையடுத்து அவர் மீது சாமுவேல்ஸ் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஏப்ரல் 4, 2016 அன்று பிக் ஸ்போர்ட்ஸ் பிரேக்ஃபாஸ்ட் என்ற டிஜிட்டல் போட்கேஸ்டில் சாமுவேல்ஸ் பற்றி ஜெஃப் லாசன் கூறும்போது, “அவர் ஜமைக்காவின் நிழலுலக குற்றவாளிகள் கும்பலுடன் தொடர்புடையவர், மேற்கிந்திய தீவுகளில் கிங்ஸ்டனைச் சேர்ந்தவர் மர்லன் சாமுவேல்ஸ். கிங்ஸ்டன் உலகின் கொலைகார நகரங்களில் முதன்மையானது. அவர் அங்கு இம்மாதிரியான கும்பல்களுடன் தொடர்புடையவர். இது கிரிக்கெட்டையும் தாண்டிச் செல்லக்கூடிய தொடர்பு” என்று கூறியுள்ளார்.
ஜெஃப் லாசன் மட்டுமல்ல, ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் இந்தச் செய்தியை வெளியிட்ட ஜேம்ஸ் மேத்தி என்ற பத்திரிகையாளர் மீதும் சாமுவேல்ஸ் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த செய்தியிலும் சாமுவேல்ஸ் ஜமைக்கா கிரிமினல் கும்பலுடன் தொடர்புடையவர் என்று கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆத்திரமடைந்த மர்லான் சாமுவேல்ஸ் தனது நேர்மையைக் காக்கவும், சர்வதேச கிரிக்கெட்டில் தனது பெயருக்கு இருக்கும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவும் முயற்சி நடப்பதாக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.