தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா? - இங்கிலாந்துடன் இன்று 2-வது பயிற்சி ஆட்டம்

தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா? - இங்கிலாந்துடன் இன்று 2-வது பயிற்சி ஆட்டம்
Updated on
1 min read

வங்கதேசத்தின் மிர்பூரில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தைச் சந்திக்கிறது இந்தியா. முதல் பயிற்சி ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வி கண்ட இந்திய அணி தோல்வியில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உலகக் கோப்பை குரூப் சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பரமவைரியான பாகிஸ்தானை சந்திக்கவுள்ள நிலையில், இங்கிலாந்துடனான இந்த பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெறுவது மிக முக்கியமானதாகும்.

இலங்கையுடனான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோற்றிருந்தாலும் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் சிறப்பாக ஆடி பார்முக்கு திரும்பியிருப்பது ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. அதேநேரத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருவது கவலையளிப்பதாக உள்ளது.

எனவே இன்றைய ஆட்டத்தில் இவர்கள் இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு ரஹானே தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ரோஹித் சர்மா மீது கேப்டன் தோனி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதால் ஷிகர் தவண் நீக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது. கடந்த இரு ஐபிஎல் போட்டிகளிலும் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரஹானே சிறப்பாக ஆடி ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின், ஜடேஜா இருவருமே ஆல்ரவுண்டர்கள் இடத்தில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகின்றனர். அவர்கள் இருவரும் இந்த ஆட்டத்திலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் முகமது சமி இந்திய அணியின் பலமாகத் திகழ்ந்து வருகிறார்.

2-வது வேகப்பந்து வீச்சாளர் இடத்தில் புவனேஸ்வர் குமாரைவிட வருண் ஆரோனுக்கே அதிக வாய்ப்புள்ளது. இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் புவனேஸ்வர் குமார் கடைசி ஓவரில் 17 ரன்களை வாரி வழங்கியது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய மோஹித் சர்மாவும், டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை. எனவே அவருக்கு இங்கிலாந்துடனான பயிற்சி ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. அவர் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடினாலும், உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கும் ஆடும் லெவனில் இடம்பெறுவது அவ்வளவு எளிதல்ல. இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பேட் செய்யாத கேப்டன் தோனி, இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை முடித்துவிட்டு பர்படாஸில் இருந்து வங்கதேசம் வந்திருக்கும் இங்கிலாந்து அணியில் கேப்டன் ஸ்டூவர்ட் பிராட் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் லியூக் ரைட், இயோன் மோர்கன், ரவி போபாரா போன்ற சில வீரர்கள் மட்டுமே சர்வதேச அளவிலான டி20 போட்டியில் நல்ல அனுபவம் பெற்றவர்கள். பெரிய அளவில் அதிரடி பேட்ஸ்மேன்கள் இல்லாதது அந்த அணியின் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in