சிந்து, சாக்ஷி, திபா கர்மாகருக்கு கார்களை பரிசு வழங்கினார் சச்சின் டெண்டுல்கர்
ரியோ ஒலிம்பிக் சாதனை வீராங்கனைகளான சிந்து, சாக்ஷி, திபா கர்மாகர் ஆகியோருக்கு இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் BMW கார்களை பரிசாக வழங்கினார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்த திபா கர்மாகர் ஆகியோருக்கு ஐதராபாத் நகரில் இன்று மிகப்பெரிய பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மூன்று வீராங்கனைகளும் மேடையில் அமரவைத்து கவுரவிக்கப்பட்டனர். பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சந்துவின் பயிற்சியாளரான கோபிசந்தும் இவ்விழாவில் சிறப்பிக்கப்பட்டார்.
சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் ஹைதராபாத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். கோபிச்சந்த் உள்ளிட்டோருக்கு கார்களை பரிசு வழங்கிய நிகழ்ச்சியில் தலைமை விருந்தாளியாக பங்கேற்ற சச்சின், கூறியதாவது:
உங்களால் இந்த நாடு பெருமையடைகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்பதில் நீங்கள் எவ்வளவு துடியாய் இருந்தீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள இதுவே சரியான தருணம். நீங்கள் இந்த நாட்டுக்கு அளிக்கவிருக்கும் ஆச்சரியகரமான தருணங்களுக்காக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். வென்றுகொண்டேயிருங்கள்.
கோபிச்சந்திடம்: எப்போதும் சாம்பியன்களை உருவாக்குவதில் உங்கள் பணி அபூர்வமானது. பயிற்சியாளராக அபாரமான குணநலன்களைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அனைவருக்கும் ரோல் மாடல்” என்றார்.
சிந்து கூறும்போது, கடந்த முறை சச்சின் தனக்கு கார் பரிசளித்த போது, ஒலிம்பிக் பதக்கம் வென்றால் இன்னொரு கார் பரிசளிப்பதாகக் கூறியதை நினைவு கூர்ந்தார். எனது கனவு நிஜமானது, அனைவருக்கும் நன்றி, கோபிசந்த் சாருக்கும் மிக்க நன்றி என்றார்.
சாக்ஷி மாலிக், திபா கர்மாகர் ஆகியோரும் சச்சினுக்கு நன்றி தெரிவித்தனர்.
